திருச்சி: காவிரி, கொள்ளிடத்தில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது - மக்கள் அவதி
திருச்சி மாவட்டத்தில் 2 ஆறுகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வேளாண் நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் அவதி.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தினால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக அணையிலிருந்து இரண்டு லட்சம் கன அடிக்கும் மேல் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இந்த வெள்ள நீர் மாயனூர் தடுப்பணையைத் தாண்டி முக்கொம்பு மேலணைக்கு ஆர்ப்பரித்து வருகிறது. பின்னர் இங்கிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ள நீர் பிரித்து திறந்து விடப்படுகிறது. இதனால் 2 ஆறுகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வேளாண் நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் அந்தநல்லூர் வட்டாரத்துக்கு உட்பட்ட கிளிக்கூடு, திருவளர்ச்சோலை மற்றும் உத்தமர்சீலி ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்ட 55 ஹெக்டேர் பரப்பளவிலான வாழை மரங்கள், வெள்ளத்தில் மூழ்கிக் கிடப்பதாக தோட்டக்கலை துறை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் துறையூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் 6 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட பருத்தி பயிர்கள் மூழ்கி கிடக்கின்றன.
மேலும் இதுவரை அந்த வெள்ள நீர் வழியாத காரணத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கபட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், "நான் சாகுபடி செய்த 3 ஏக்கர் வாழை மரங்களும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. காவிரியில் எப்போதெல்லாம் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் எங்களது வேளாண் நிலங்களும் பாதிக்கப்படுகின்றன. இந்த ஆண்டில் மட்டும் 5-வது முறையாக வெள்ள பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த பாதிப்புக்கு இழப்பீடுடன் நின்றுவிடாமல் பிரச்சனைக்கு நீண்ட கால தீர்வை காண வேண்டும்" என்றார். லால்குடி கூகூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற விவசாயி கூறும்போது, "நான் 5 ஏக்கரில் வாழை மரங்களும் மூன்றரை ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடியும் செய்திருந்தேன். காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்ட போது கரைகளில் மணல் மூட்டைகளை அடுக்கி முடிந்த அளவுக்கு முயற்சி செய்து பார்த்தேன். இருந்தபோதிலும் எனது வேளாண் நிலங்களை வெள்ளநீர் சூழ்ந்து விட்டது" என கூறினார். மாவட்டம் முழுவதும் சுமார் 100 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட வாழை, நெல்,பருத்தி பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் திருப்பராய்த்துறை பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அவர்கள் மேடான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதேபோன்று கரூர் மாவட்டம் நொய்யல் அருகாமையில் உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியில் 50 வீடுகளை காவிரி நீர் சூழ்ந்து கொண்டதால் அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அங்குள்ள ஈவேரா பெரியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகள் வெள்ளம் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர். கல்லணையில் இருந்து சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் வரத்து இருந்ததால் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமத்தில் கொள்ளிடம் இடது கரையில் மண் சரிவு ஏற்பட்டு கரை உடையும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து நீர்வளத்துறை அதிகாரிகளால் உடனடியாக கண்டறியப்பட்டு அந்த இடத்தில் பெரிய பாறாங்கற்கள் கொண்டு மண் அரிமானம் ஏற்படாதவாறு சரி செய்யப்பட்டு வருகிறது. இதனால் சேதம் ஏற்படாதவாறு 50 கிராமங்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை செயற்பொறியாளர் தமிழ்செல்வன், உதவி செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் ஹரி ஆகியோர் உடனடியாக மேற்கொண்டனர்.