திருச்சியில் காவலாளி மீது கல்லை போட்டு கொல்ல முயன்ற வாலிபருக்கு 6 ஆண்டு சிறை
திருச்சி மாநகரில் காவலாளியை கொலை செய்ய முயன்ற சைக்கோ வாலிபருக்கு 6 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.
திருச்சி பொன்மலை சங்கேஸ்வரி நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). இவர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தாா். இந்தநிலையில் கடந்த 3-3-2020 அன்று அதிகாலை 2.15 மணி அளவில் இவர் வணிக வளாகத்தின் வராண்டாவில் படுத்து தூங்கினார். அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர் அவர் மீது கல்லை தூக்கி போட்டுள்ளார். இதனால் திடுக்கிட்டு கண் விழித்து எழுந்த செந்தில்குமார், அவரை சத்தம் போட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், அதே கல்லை மீண்டும், மீண்டும் தூக்கி செந்தில்குமாரின் தலை மற்றும் மார்பில் போட்டுள்ளார். பின்னர், அவர் வைத்திருந்த செல்போனை தூக்கிச்சென்றுவிட்டார். இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் காலை வரை ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார், கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து செந்தில்குமார் வீடு திரும்பினார்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அந்த வாலிபர், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (27) என்பதும், சேலம் பஸ் நிலையம், புதுக்கோட்டை பகுதியில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கல்லை போட்டு கொலை செய்துள்ளதும், கறம்பக்குடி பகுதியில் 12 வயது சிறுமியை கிணற்றில் தள்ளி கொலை செய்ததும் தெரியவந்தது. அவர் மீது 3 கொலை வழக்குகள் இருப்பதும், அவர் ஒரு சைக்கோ என்பதும் தெரியவந்தது. மேலும் அவரை சேலம் போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து ராஜேஷ்குமார் இந்த வழக்கில் கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி 1-வது சப்-கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி மகாலட்சுமி, குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ்குமாருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் கவியரசன் ஆஜரானார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்