வேலைக்காக வெளிநாட்டிற்குச் சென்ற வாலிபர் தமிழகம் திரும்பும் போது நடுவானில் உயிரிழந்தார்
3 ஆண்டுகள் ஒப்பந்தங்கள் முடிந்தும் அவர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் மலேசியாவிலேயே தவித்து வந்துள்ளார். பலமுறை தனது உடல்நிலை குறித்து எடுத்துக் கூறியும் உரிமையாளர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை 8.15 மணிக்கு மலேசிய கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தடைந்தது- இந்த விமானத்தில் புதுக்கோட்டை மாவட்டம், நீர்பழனி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் வேல்முருகன் (36) என்பவர் விமானத்தில் அமர்ந்தவாறு இருந்துள்ளார். உடனடியாக விமான நிலைய மருத்துவ நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்த விமானத்திற்குள் வந்த மருத்துவர் வேல்முருகனை சோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் இது குறித்து வேல்முருகனின் மனைவி மற்றும் உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கபட்டது. மேலும் அவர்களிடம் விசாரணை செய்தபோது, வேல்முருகன் மலேசியாவில் ரவி என்பவருக்கு சொந்தமான முடி திருத்தும் கடையில் ஒப்பந்த தொழிலாளியாக சேர்ந்ததாகவும் மூன்று ஆண்டுகள் ஒப்பந்த காலம் முடிந்தும் ரவியின் மகன் வேல்முருகனை ஊருக்கு அனுப்பாமல் வேலை வாங்கியாதாக தெரிவித்தனர். ஊருக்கு திரும்புவதற்கு கூட பணம் இல்லாமல் உறவினர்கள் இங்கு இருந்து டிக்கெட் புக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேல்முருகன் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டிற்குச் சென்று பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். இதன்படி மலேசியா நாட்டிற்கு சென்று முடி திருத்தும் கடையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய குடும்பத்திற்கு தேவையான ஓரளவு பணம் சம்பாதித்த பிறகு உடல் நிலை சரியில்லாததால் தனது சொந்த ஊருக்கு செல்வதாக வேல்முருகன் முடிவெடுத்தார். ஆனால் மூன்று ஆண்டுகள் ஒப்பந்தங்கள் முடிந்தும் அவர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் மலேசியா நாட்டிலேயே தவித்து வந்துள்ளார். பலமுறை தனது உடல்நிலை குறித்து எடுத்துக் கூறியும் கடை உரிமையாளர்கள் அவரை தமிழ்நாட்டுக்கு அனுப்புவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்து தாய்க்கும் மனைவிக்கும் தொலைபேசி மூலமாக தெரிவித்தார் ஏறும் டிக்கெட் புக் பண்ண கூட பணம் இல்லை என அழுதபடியே தெரிவித்துள்ளார்.
உடனடியாக பெற்றோர்கள் உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வேல்முருகன் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு பணம் கொடுத்து உதவி செய்தனர். மேலும் வேல்முருகன் கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த போது நடுவானில் வேல்முருகன் உயிரிழந்த செய்தியைக் கேட்டவுடன் பெற்றோர்கள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு எப்படியும் வேல்முருகன் நல்லபடியாக வந்துவிடுவார் என்று காத்திருந்த வேல்முருகனின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு அவரது மரணம் பெரும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்படுத்தி உள்ளது. என் உயிரை எடுத்துகொண்டு என் மகனுக்கு உயிர் தாருங்கள் என்று வேல்முருகனின் அன்னை கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வெளி நாடுகளுக்கு செல்வதில் தவறு இல்லை, ஆனால் சூழல் சரி இல்லை என்ற உடன் ஊர் திரும்பவில்லை என்றால் அது அவர்களுக்கு மட்டும் பாதிப்பல்ல அவர்களின் மொத்த குடும்பத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கவலையுடன் கூறுகின்றனர் வேல்முருகனின் உறவினர்கள்.