தமிழ்நாட்டில் மழை நீரை சேமிக்க உரிய கட்டமைப்பு இல்லை - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
பல நூறு டிஎம்சி தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கும் சூழல்தான் உள்ளது. காரணம் தமிழ்நாட்டில் மழை நீரை சேமிக்க உரிய கட்டமைப்பு இல்லை.

தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் 100 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திருச்சி மாவட்டம் காவிரி ஆற்றில் இறங்கி விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் டெல்டா பகுதி விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார்.
பின்னர் விவசாயிகளிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்:
22 மாவட்டங்கள் காவிரி ஆற்றை நம்பி இருக்கின்றன; காவிரி ஆறு நமக்கு கிடைத்த வரம். தமிழ்நாட்டில் வாழும் 8 கோடி மக்களில் 5 கோடி மக்கள் காவிரி ஆற்றை நம்பி இருக்கிறார்கள். காவிரி ஆறு இயற்கை கொடுத்த வரம் அந்த வரத்தை சரியாக நாம் பயன்படுத்தவில்லை. ஒரு மாதம் தமிழ்நாட்டில் பையும் மழையை பயன்படுத்தி மற்ற 11 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும் அதுதான் சிறந்த நீர் மேலாண்மை. முன்பு 45 நாட்கள் பெய்த மழை தற்போது 30 நாட்கள் பெய்கிறது ஆனால் 45 நாட்கள் கிடைக்க வேண்டிய மழை நீர் நமக்கு கிடைக்கிறது ஆனால் அவற்றை நாம் முறையாக சேமிக்கவில்லை.
2023-ல் 520 டி எம் சி மழை நீர் வீணாக சென்று கடலில் கலந்தது
இந்த ஆண்டும் அதேபோல பல நூறு டிஎம்சி தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கும் சூழல்தான் உள்ளது காரணம் தமிழ்நாட்டில் மழை நீரை சேமிக்க உரிய கட்டமைப்பு இல்லை. என்னை பொருத்தவரையில் தமிழ்நாடு பட்ஜெட் நீர் பாசன திட்டத்திலிருந்து தான் தமிழ்நாடு பட்ஜெட்டை தொடங்க வேண்டும். நீர்ப்பாசன திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்தால் தான் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியும். தமிழ்நாட்டில் 63 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள் அவ்வளவு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ன தேவை உள்ளது என்பது தமிழக அரசுக்கு தெரியவில்லை. விவசாயிகளுக்கு தேவையான நீரை கொடுக்க வேண்டும் மண்ணை பாதுகாக்க வேண்டும் விவசாயிகளின் விளைச்சலுக்கு மரியாதை கொடுத்து அவர்களுக்கு விளைச்சலுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு மட்டும் 56 வாக்குறுதிகளை திமுக கொடுத்தது அவற்றில் வெறும் 8 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியது என அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
2021 தேர்தலுக்கு முன்பு திமுக கொடுத்த 56 வாக்குறுதிகளில் இன்னும் சொல்லப்போனால் சத்தியங்களில் வெறும் எட்டு வாக்குறுதிகளை மட்டும்தான் நிறைவேற்றி இருக்கிறார்கள். மீதம் 48 வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை திமுக அரசு ஏமாற்றி விட்டது. கர்நாடகா 6 மாவட்ட விவசாயிகளுக்காக 77 ஆயிரம் கோடியை சமீபத்தில் ஒதுக்கியுள்ளது.ஆனால் நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு இதுபோன்ற ஒரு திட்டத்தை கூட செயல்படுத்தவில்லை. சமீபத்தில் கர்நாடக அரசு கிருஷ்ணா நதியின் குறுக்கே செயல்படுத்தும் நீர் பாசன திட்டத்திற்கு 77 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கர்நாடகா மாநிலத்தில் 6 மாவட்டங்கள் 15 லட்சம் ஏக்கர் பயன்பெறும். நான்கரை ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இதுபோன்ற ஆக்கபூர்வமான விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை.
கொள்ளிடம் ஆற்றில் 10 தடுப்பணைகளை கட்ட வேண்டும்
கொள்ளிடம் ஆறு மொத்தம் 110 கிலோ மீட்டர்களைக் கொண்டது. ஒவ்வொரு 10 கிலோ மீட்டருக்கும் ஒரு தடுப்பணைகளை கட்டினால் விவசாயிகளுக்கும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிய அளவில் பயன்பெறுவார்கள். டெல்டா பகுதி என்பது இயற்கை நமக்கு கொடுத்த வரம் எப்படிப்பட்ட டெல்டா பகுதி இன்றைக்கு எவ்வாறு சீரழிந்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டை நெல்லுக்கு 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை லஞ்சம் வாங்குகிறார்கள். அதனை தடுப்பதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒடிசாவில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ஊக்கத்தொகையாக 800 ரூபாய் கொடுக்கப்படுகிறது. ஆந்திராவில் 500 ரூபாய் கொடுக்கப்படுகிறது ஆனால் தமிழ்நாட்டில் வெறும் 131 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது.
அண்டை மாநிலங்களான ஆந்திரா ஒடிசா போன்ற மாநிலங்கள் விவசாயிகளுக்கு அதிக ஊக்கத்தொகை கொடுக்கிறார்கள், ஆந்திர மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு குவிண்டால் நெல்லுக்கு 500 ரூபாய் கொடுக்கப்படுகிறது. ஒடிசா மாநில அரசு ஒரு குவின்டால் நெல்லுக்கு 800 ரூபாய் ஊக்கத்தொகை கொடுக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு வெறும் 131 ரூபாய் தான் கொடுக்கிறது. கடந்த ஆண்டு தமிழக அரசு 130 ரூபாய் கொடுத்து வந்தது தற்போது பெரிய மனது வைத்து ஒரு ரூபாய் சேர்த்து கொடுக்கிறார்கள்.
நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வாறு விவசாயிகளிடம் கொள்ளையடிக்கப்படுகிறது:
விவசாயிகளிடம் ஒரு குவின்டால் அதாவது 100 கிலோ எடை கொண்ட நெல்லுக்கு நெல் கொள்முதல் நிலையங்களில் 275 ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள். இந்த லஞ்சப்பணம் அமைச்சர் முதல் அடிமட்டத்தில் உள்ள அதிகாரிகள் வரை பகிர்ந்து கொள்ளப்படுகிறது. 40 கிலோ எடை கொண்ட நெல் மூட்டையை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றாள் 38 கிலோ தான் எடுத்துக் கொள்கிறார்கள் இரண்டு கிலோவை கணக்கில் காட்ட மறுக்கிறார்கள். இது தவிர ஒரு மூட்டைக்கு 40 முதல் 60 ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள். இவ்வாறு பேசினார்.





















