திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு கடும் போட்டி - முந்தப்போவது நேருவா; அன்பில் மகேஷா ?
திருச்சி அரசியலில் முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் அமைச்சர் நேருவின் மகன், அருண் நேரு மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் திமுகவினர் இடையே எழுந்து
திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட தொடர்ந்து சீட் பெறுவதில் ஆளுங்கட்சியான திமுகவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வரும் 22ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதற்கு ஏற்ப அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி செய்யப்பட்டு அதற்கான இட ஒதுக்கீடு அரசாணை வெளியிடப் பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி மேயர் பதவி 28 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஆண், பெண் இருவருக்கும் போட்டியிடும் வகையில் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 10 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியில் அமர்ந்துள்ள திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மாநகராட்சி மேயர் பதவியை குறிவைத்து தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் 27 வார்டுகள் அமைச்சர் நேருவின் தீவிர ஆதரவாளரும் திருச்சி மத்திய மாவட்ட செயலாளருமான வைரமணியின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. மீதமுள்ள 38 வார்டுகள் மாவட்டத்தில் மற்றொரு அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கட்டுப்பாட்டில் வருகின்றன. இதனால் இரு தரப்பினரும் தங்களை சேர்ந்தவர்கள் மேயராக வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளனர். அதற்கான பணிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்காக சீட் பெற திமுக நகர செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேருவின் தீவிர ஆதரவாளருமான அன்பழகன் குறி வைத்துள்ளார். ஏற்கனவே இவர் மேயர் பதவியை எதிர்பார்த்து எதிர்பார்த்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் துணை மேயராக மட்டுமே பதவி வகித்து உள்ள அன்பழகன் இந்த முறை எப்படியும் மேயர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆகவே இந்த முறை மேயர் பதவியை பொதுப் பிரிவுக்கு அமைச்சர் நேரு அவர்களின் ஆசியுடன் மாற்றப்பட்டுள்ளதாகவும் கட்சிக்குள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் 2011ஆம் ஆண்டு திமுக சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த மாவட்ட துணைச் செயலாளரான விஜயா ஜெயராஜ் ஆளும் கட்சியாக உள்ள இந்த முறை வாய்ப்பு பெற்று விட வேண்டும் என்றும் முயற்சி செய்து வருகிறார். இவர்களுக்கு இணையாக திருச்சி தெற்கு மாவட்டம் மலைக்கோட்டை பகுதியை செயலாளர் மதிவாணன் முயற்சியில் இருக்கிறார் திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீவிர ஆதரவாளராக உள்ள மதிவாணன் மாவட்டத்திற்குள் மாநகராட்சி மேயர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மூலமாக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவரை போன்றே திருவெறும்பூர் தொகுதியி சேர்ந்த சேகரன் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட விரும்பிய நிலையில் அத்தொகுதியில் அன்பில் மகேஷ் போட்டியிட்டதால் தனது மகளுக்காக மேயர் சீட் கேட்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக அனைவருக்கும் மேலாக யாரும் எதிர்பாராத வகையில் சமீபகாலமாக திருச்சி அரசியலில் முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் அமைச்சர் நேருவின் மகன், அருண் நேரு மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் திமுகவினர் இடையே எழுந்து உள்ளது. சமீப காலத்தில் அவரது நடவடிக்கைகளும் அவருக்கு கட்சியினர் அளிக்கும் முக்கியத்துவம் இதை உறுதிப்படுத்தி வருகின்றது. இதனை தொடர்ந்து அதேசமயம் திருச்சி மேயர் பதவி பெண்களுக்கு என்று இருந்தால் கனவில் இருந்த பல பெண்களும் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட் ஆகி உள்ளனர். தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் இப்படி திருச்சி மேயர் பதவிக்கு சீட் பெறுவதில் திமுக கடும் போட்டி உருவாகியுள்ளது. அரசியலை பொறுத்தவரை எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் கடைசி நேரத்தில் மாற்றம் வந்தாலும் வரலாம் என்பதால் பலரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்கின்றது திருச்சி கலைஞர் அறிவாலயம் வட்டாரங்கள்.