திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் 14 திட்டங்களை இம்மாதத்திற்குள் முடிக்க இலக்கு
திருச்சி மாநகரில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளில் 14 திட்டம் இம்மாதம் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணையம் செய்துள்ளதாக என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி நகரில் கடந்த ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் என்ற அளவில் நிதி பெறப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. முதலில் சத்திரம் பஸ் நிலையத்தை நவீன வசதியுடன் மேம்படுத்துதல், மலைக்கோட்டை தெப்பக்குளம் பகுதியில் பூங்கா அமைத்து வண்ண ஒளியுடன் நீரூற்று அமைத்தல், மலைக்கோட்டையை மின் விளக்குகளால் ஒளிரச்செய்தல். போன்ற பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. மேலும் தில்லை நகரில் 15 கோடியில் வணிக வளாகம், 17 கோடியில் உய்ய கொண்டான் வாய்க்காலை அழகுபடுத்தும் பணி, 50 கோடியில் அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை உரமாக மாற்றி அந்த இடத்தில் பூங்கா அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட் சிட்டி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக தொடர்ந்து பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நகரின் உள்கட்டமைப்பு தொடர்பான 14 திட்டங்களின் பணிகளை விரைந்து மேற்கொண்டு, இந்த மாத இறுதிக்குள் இந்த திட்ட பணிகளை முடிக்க திருச்சி மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த கட்டளை கட்டுப்பாட்டு மையம், உய்யங்கொண்டான் ஆற்றுப்படுகை மேம்பாடு, ஸ்மார்ட் அறிவிப்பு பலகைகள் மற்றும் பாரம்பரிய சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள், அடுத்த சில வாரங்களில் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சி மாநகராட்சி உயர் அதிகாரி கூறியதாவது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சிவில் பணிகள் குறித்த தணிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள், இன்னும் நிறைய திட்டங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.
சத்திரம் பேருந்து நிலையம், தில்லை நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம், பஞ்சப்பூர் பகுதியில் 2.4 மெகாவாட்ஸ் திறன் கொண்ட சோலார் பூங்கா உள்ளிட்ட திட்டங்களின் 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையிலும், இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. பல அடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள், இன்னும் துவக்க நிலையிலேயே உள்ளன.
கிழக்கு பவுல்வார்டு சாலையில் சரக்கு முனையம் மற்றும் ஸ்ரீரங்கத்தில் அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் கணித பூங்கா உள்ளிட்ட திட்டங்களின் பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன. 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், நாட்டின் 100 நகரங்களில் நகர்ப்புற மேம்பாட்டு பணிகளை மேம்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்சி நகரில், கடந்த 4 ஆண்டுகளில், 23 திட்டங்கள் மட்டுமே நிறைவு பெற்று உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மெதுவாக நடைபெறுவதற்கு கொரோனா தொற்று பரவல், மற்றும் அதனை ஒட்டி பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே காரணம் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சி இன்ட்ரா சிட்டி மேம்பாட்டு பெருமுயற்சி (TIDES) அமைப்பின் உறுப்பினர் என்.மணிவண்ணன் கூறியதாவது, ஷாப்பிங் மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுமானங்களில் நிலவும் தாமதங்களின் காரணமாக, திருச்சியின் வணிக வளர்ச்சியில் முட்டுக்கட்டை நிலவி வருகிறது. தங்களது வணிக்ததிற்காக சிறந்த இடத்தை தேடி வரும் முன்னணி சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள், தனியார் வசம் உள்ள இடங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்த வேண்டும் என அவர்களுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.