திருச்சி கோட்டத்தில் 6 மாதத்தில் 438.70 கோடி SGST வரி வசூல்!- எச்சரிக்கும் வணிகவரித்துறை அமைச்சர்
திருச்சி வணிகவரி கோட்டத்தில் கடந்த 6 மாத காலத்தில் மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக (SGST) ரூபாய் 438.70 கோடி வருவாய் ஈட்டபட்டுள்ளது. கடந்தாண்டை காட்டிலும் 35% கூடுதலாக வரி வசூல்
திருச்சி வணிகவரி கோட்டத்தில் கடந்த 6 மாத காலத்தில் மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக (SGST) ரூபாய் 438.70 கோடி வருவாய் ஈட்டபட்டுள்ளது. தமிழக அரசுக்கு வருவாயை ஈட்டு தரக்கூடிய முக்கிய துறைகளில் ஒன்றான வணிகவரி துறையாகும். தமிழக வணிகவரி துறையில் அனைத்து பதிவுகள் முறையாக நடைபெற வேண்டும் என தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
குறிப்பாக வணிகவரி அலுவலகத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல் சரியான கட்டணத்துடன் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆவணங்களைப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் புதிதாக கட்டுப்பாட்டு அறை விரைவில் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதன்படி திருச்சி , பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 8 வருவாய் மாவட்டங்களையும், மற்றும் கரூர் மாவட்டத்தின் குளித்தலை வருவாய் வட்டத்தையும் உள்ளடக்கிய திருச்சி வணிகவரி கோட்டத்தில் 31 வரிவிதிப்பு வட்டங்கள் செயல்பட்டு வருகின்றது.
திருச்சி வணிகவரி கோட்டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாத காலத்தில் மாநில சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் 324.67 கோடியாக இருந்த நிலையில் 2021ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் இந்த வருவாய் 35 சதவிகிதம் அதிகரித்து 438.70 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு 114.03 கோடி கூடுதலாக வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதத்தில் மட்டும் புதிதாக 3340 வணிகர்கள் பதிவு சான்று பெற்றுள்ள நிலையில் பதிவு பெற்ற வணிகர்களின் மொத்த எண்ணிக்கை 52,000 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு கூட்டங்களை நடத்தி வருவதுடன் அவ்வப்போது வணிகவரி அலுவலங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், நாகை, ஆகிய மாவட்டங்களில் பல்வேறு கட்ட ஆய்வுகளையும், ஆலோசனை, கூட்டங்களையும் நடத்தி வந்தார். வணிகவரித் துறையில் சரியான முறையில் வரி செலுத்தாமல் இருந்தாலும், போலி ஆவணங்களை சமர்ப்பித்தாலும் வணிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி எச்சரித்து இருந்தார்.
அதன்படி அனைத்து வணிகவரி துறை அலுவலகத்திலும் தீவிர தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் வரி செலுத்துவோர் சரியான ஆவணங்களை வைத்து உடனடியாக வரி செலுத்த வேண்டும் என அதிகாரிகள் வணிகர்களுக்கு தெரிவித்துள்ளனர். மேலும் வரி செலுத்தாத பட்சத்தில் அவர்களுடைய சான்றிதழ் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.