திருச்சியில் மணல் குவாரி தொழிலதிபர் இடத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
திருச்சி திருவானைக்காவல் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்று மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் நடத்தும் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ள நிலையில், வழக்கு தொடர்பாக அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குக்கு தொடர்புடைய சோதனை எனவும் அதிகாரிகளால் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அமலாகத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நான்கு முறை சோதனை செய்தது. அவரின் வீடு, அவரது சகோதரர் வீடு, உறவினர்கள் வீடு, தொழில் சம்பந்தமான இடங்கள் ஆகிய இடங்களில் சோதனையானது மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் புதிதாக வாங்கிய அசையும், அசையா சொத்துகளின் விவரங்கள் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த இடங்களில் எல்லாம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று அமலாக்கத்துறை மீண்டும் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனையை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனையானது யார் யார் வீடுகளில் நடத்தப்பட்டது உள்ளிட்ட விவரங்களை சோதனை முடிவில் அமலாக்கத்துறை அறிகையில் வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது. தற்போது நடத்தப்படும் சோதனைகளின் அடிப்படையில் அங்கு கிடைக்கப் பெறும் ஆவணங்களை வைத்து மேலும் சில இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் புதுக்கோட்டை ராமச்சந்திரனுக்கு மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கத் துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய 5 துணை ராணுவத்தினருடன் இரண்டு கார்களில் வந்து மணல் குவாரி மற்றும் மணல் கொட்டி வைத்து விற்பனை செய்யப்படும் இடத்திலும் சோதனை செய்து வருகின்றனர். மேலும் முன்னதாக ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதற்குள் அமைச்சர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது