ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய திமுக ஒன்றிய செயலாளர் - வழக்குப்பதிவு செய்ய போலீஸ் மறுப்பதாக புகார்
கொலை வழக்கில் சம்பந்தபட்ட திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல் மற்றும் தொழில் அதிபர் ரவி முருகையா ஆகியோர்களை கைது செய்யும் வரை சிவகுமாரின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி சோமரசம்பேடை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் சிவகுமார் கொலை வழக்கில் திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல் மற்றும் வாசன் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் ரவி முருகையா ஆகியோர்களை கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சிவகுமாரின் குடும்பத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவக்குமார் உயிரிந்த 3 நாட்கள் ஆன நிலையில் அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை மல்லியம்பத்து ஒன்றியத்தில் உள்ள செங்கதிர் சோலை கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சில்க் ரியல் எஸ்டேட் அதிபர் சிவகுமார் வீட்டில் இருந்தபோது உருட்டுக்கட்டையால் பிரபாகரன் மற்றும் தீபக் ஆகியோர் அடித்துக் கொலை செய்தனர். இதுதொடர்பாக சோமரசன்பேட்டை காவல்துறையினர் சிவகுமார் மனைவி மைதிலி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் செங்கதிர் சோலையை சேர்ந்த பிரபாகரன், தீபக் ஆகியோர் திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல் மற்றும் வாசன் எஸ்டேட் நிறுவனர் ரவி முருகையா தூண்டுதலின் பேரில் சிவகுமாரை கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 குற்றவாளிகளான திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல்,வாசன் ரியல் எஸ்டேட் அதிபர் ரவி முருகையா மற்றும் பிரபாகரன், தீபக் ஆகியோர் மீது சோமரசன்பேட்டை காவல் நிலையத்தில் சிவகுமாரின் மனைவி மைதிலி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக தீபக் மற்றும் பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்தனர். கொலையில் முக்கிய குற்றவாளிகள் முன்னாள் மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் திமுகவை சேர்ந்த கதிர்வேல் மற்றும் வாசன் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ரவிமுருகையா உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்து கொலை செய்யப்பட்ட சிவகுமாரின் உடலை இதுவரை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் எஸ்டேட் உரிமையாளர் ரவி முருகையா மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் மல்லியம்பத்து திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேலயை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொலை செய்யப்பட்ட சிவகுமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் மேலும் மல்லியம்பத்தை ஒன்றியத்தை சேர்ந்த 200க்கு மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுப்பார்கள் எனவே, மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு இருக்கக்கூடிய சிவக்குமாரின் உடலை வாங்க வேண்டும் என்று கேட்ட போது கதிர்வேல் மற்றும் ரவி முருகையா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தால் மட்டுமே சிவக்குமாரின் உடலை நாங்கள் வாங்குவோம் என்று உறுதியாக தெரிவித்துள்ளனர். மேலும் கொலை வழக்கில் சம்பந்தபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் எங்கள் போராட்டம் தீவரமடையும் என மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் தெரிவித்தனர்.