மாமூல் தர மறுத்த மெடிக்கல் கடை உரிமையாளர் அடித்துக்கொலை: பெரம்பலூரில் பரபரப்பு...!
பெரம்பலூரில் மாமூல் தர மறுத்த மெடிக்கல் கடை உரிமையாளரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாறப்பன் மகன் நாகராஜன். இவர், அதே ஊரில் மெடிக்கல் கடந்த 25 ஆண்டுகளாக மருந்தகம் நடத்தி வருகிறார். அதே ஊரில் அம்பேத்கர் குடியிருப்பைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் தலைமையில் சதீஷ், நிதீஷ், புகழேந்தி, ரவி ஆகியோர் அடங்கிய கும்பல், அடிக்கடி நாகராஜனை மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறது.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு மருந்தகத்திற்கு சென்று நாகராஜனை மிரட்டி அந்த கும்பல் மாமூல் கேட்டிருக்கிறது. அவர்களின் மிரட்டலுக்கு பணிந்த நாகராஜன் ரூ.150 மட்டும் கொடுத்துள்ளார். அதை பெற்றுச் சென்ற கும்பல், அடுத்த சிறிது நேரத்தில் மீண்டும் நாகராஜனிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளது. ஆனால், நாகராஜன் மாமூல் தர மறுத்து விட்டார். அத்துடன் இதுகுறித்து பிரபாகரனின் தந்தையிடம் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு ரவுடிகள் இருவரும், நாகராஜனிடம் மீண்டும் மாமுல் கேட்டு மிரட்டியுள்ளனர். மாமூல் தர மறுத்த நாகராஜனை, ரவுடிகளான பிரபாகரன், ரகுநாத் மற்றும் செந்தில்குமார் மகன் கார்த்திக், சுப்ரமணி மகன் சுரேஷ், ஆனந்த குமார் மகன் அஜித்குமார் ஆகியோர் ஆயுதங்களால் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர்.
இதனை தொடர்ந்து நாகராஜன் வீட்டுக்குச் சென்று மயங்கி விழுந்தார். அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நாகராஜனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொலை செய்த ரவுடிகளை உடனடியாக கைது செய்தால் மட்டுமே பிரேதத்தை பெற முடியும் என கூறி அவரது உறவினர்கள் மற்றும் அக் கிராமத்தினர் பெரம்பலூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஏடிஎஸ்பி ஆரோக்கிய பிரகாசம், டிஎஸ்பி சஞ்சீவ்குமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட டோரிடம் கொலை குற்றங்களை கைது செய்வோம் என உறுதி அளித்ததின் பேரில் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் துறையூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொலையில் ஈடுபட்ட ரவுடிகள் 5 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வலியுறுத்தி அக்கிராம மக்கள் பெரம்பலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலைக் குற்றவாளிகளான ரவுடிகள் பிரபாகரன், கார்த்திக், சுரேஷ், ரகுநாத் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாமூல் வாங்குவதற்காக வன்முறை கும்பல் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் இந்த பகுதியில் கடை நடத்த முடியாது; வன்கொடுமை வழக்கில் பொய்யாக சிக்க வைத்து விடுவோம் என்பது தான். பெரம்பலூர் மாவட்டத்திலும், பிற மாவட்டத்திலும் மாமூல் கேட்டு மிரட்டும் கும்பலால் பல்லாயிரக்கணக்கான தொழில் முனைவோரும், வணிகர்களும் பாதிக்கப்பட்டு, இன்று வரை அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வணிகர்களுக்கு பாதுக்காப்பு அளிக்கவேண்டும் என வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாகவுள்ள அஜித்குமாரை தேடிவருகின்றனர். பிரபாகரன், ரகுநாத் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்ற வழக்குகள் பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.