ADMK Case: இ.பி.எஸ்.க்கு ஆதரவான தீர்ப்பு..! 'எடப்பாடி பழனிசாமிக்கு இது தற்காலிக வெற்றியே..' - டிடிவி தினகரன் பேட்டி
தேர்தலில் பரப்பரை மேற்கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜாக்கிரதையாக பேச வேண்டும். டிடிவி.தினகரன் பேட்டி
திருச்சியில் அமமுக நிர்வாகிகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் திருச்சிக்கு வந்தார். அவருக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்பு, நிருபர்களுக்கு பேட்டி அளித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளரிடம் பேசுகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்காலிக வெற்றி தான். இந்த தீர்ப்பு ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றியை தராது. வேண்டுமானால் 5 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற வழி வகுக்கும் என்றார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி வசம் இரட்டை இலை சின்னம் இருந்தால் அது அ.தி.மு.க வை மேலும் பலவீனப்படுத்தும்.
அதிமுக பொதுக்குழு குறித்து மேல் முறையீடு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பேசிய அவர், தர்ம யுத்தம் 1 ல் ஒ.பி.எஸ் வெற்றி பெற்றார். தற்போது அவர் நடத்தும் தர்மயுத்தத்தில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 2017 ஏப்ரல் மாதத்திலிருந்தே பா.ஜ.க தான் அதிமுகவை இயக்குகிறது. நீதிமன்றங்களையும் பா.ஜ.க தான் இயக்குகிறதா என்பதை நான் கூற முடியாது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக வெற்றி பெறும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் பல முறைகேடுகள் செய்வார்கள். இதனை தொடர்ந்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை உருவாக்கும் அணியில் அ.ம.மு.க அங்கம் வகிக்கும். தனியாக களம் காணவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
இந்த தீர்ப்பில் பின்னடைவை சந்தித்ததால் ஓ.பன்னீர்செல்வத்தை அமமுகவில் இணையுமாறு அழைக்க மாட்டேன். அது மனிதத் தன்மையும் அல்ல. மேலும் கமலஹாசன் பேசுவதையெல்லாம் காமெடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் நடிகராக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்துள்ளார்.
தேர்தலில் பரப்பரை மேற்கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜாக்கிரதையாக பேச வேண்டும். ஆளுநர் ஆளுநராக செயல்பட வேண்டும், அவர் பேசும் பேச்சு ஆளுநர் பதவிக்கு, ஆர்.என்.ரவிக்கும் அழகல்ல. அவர் மத்திய அரசின் பிரதிநிதி அதனால் அப்படி பேசுகிறார். மேலும் ஆளுநர் பதவி என்பது தேவை இல்லை என்பது தான் எல்லோருடைய நிலைப்பாடும். ஆனால் அந்த பதவி இருக்கும் போது ஆளுநரை மதித்து தான் ஆக வேண்டும். தி.மு.க ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஆளுனரை மதித்து தான் ஆக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இது அவர்களுக்கு தர்மசங்கடமான நிலை என்றார்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்