திருச்சியில் ஒமிக்ரான் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 42 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு
திருச்சி அரசு மருத்துவமனையில் ஒமைகிரான் சிறப்பு வார்டு 42 படுக்கைகளுடன் தாயார்- மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கையில் அந்தந்த மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தமிழக அரசு கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவுவதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்திலேயே முழு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு உடனே தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆகையால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கை பிறப்பித்துள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா மற்றும் ஒமைகிரான் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு வார்டு அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் வனிதா கூறுகையில்.. திருச்சி அரசு மருத்துவமனையில் 42 படுக்கைகளுடன் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அவசரகால சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் ஆக்சிஜன் செலுத்தும் வசதி, செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபரின் நோயின் தீவிரம் குறைக்கவும், ஏற்கனவே தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் அவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்கி வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவமனையில் கொரோனா , ஒமைக்ரான் தொர்றால் வார்டுகளில் நோயாளிகள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டு அங்கு இடமில்லாத நிலை ஏற்பட்டால் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும். மேலும் தொற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு பரிசோதனை செய்தல், ஆக்சிஜன் வழங்கும் வசதிகள் தயாராக உள்ளது என்றார்.
மேலும் கொரோனா தொற்றை விட ஒமிக்ரான் தொற்று அதிக வேகமாக பரவ கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக ஓமிக்ரான் தொற்று பற்றி அச்சப்பட தேவையில்லை, பொதுமக்கள் அரசு கூறும் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், பொது இடங்களில் கூட்டமாக மக்கள் இருப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இரண்டு தவணை தடுப்பூசிகளை கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இவற்றை நாம் முழுமையாக கடைப்பிடித்தாலே தொற்றில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் அலட்சியத்தினால் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. ஆகையால் மக்கள் அலட்சியப்போக்கு தவிர்த்து பாதுகாப்பாக அரசு கூறும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.