'சென்னைக்கு தி.நகர்’ திருச்சிக்கு சிங்காரத்தோப்பு..!
திருச்சியில் ஒரு பெரிய வர்த்தக மையாக திகழ்ந்து வரும் சிங்காரத்தோப்பில், மக்களுக்கு தேவையான அனைத்தும் மலிவு விலையில் கிடைக்கின்றன
திருச்சி என்றாலே நம் நினைவுக்கு வருவது முதலில் மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் ,பெரிய கடை வீதி, தெப்பக்குளம் போன்றவைதான். இந்த பகுதியை எல்லாம் நாம் ஏன் நினைவில் வைத்துக் கொள்கிறோம்? இவை அனைத்தும் பிரபலமான இடங்கள் மற்றும் முக்கிய விற்பனை மையங்களாக இருப்பதுதான். இதே போன்று மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு ஏராளமான கடைகள், விற்பனை மையங்களை கொண்டுள்ள மற்றொரு பிரபலமான இடமும் இங்கு உண்டு. அதுதான் ’சிங்காரத்தோப்பு’. இந்த சிங்கார தோப்பில் ஏராளமான சிறிய கடைகள், மொத்த விற்பனை மையங்கள், துணிக்கடைகள் மட்டுமல்லாது மற்ற அனைத்து விதமான கடைகளும் அமைந்துள்ளது. மேலும் இந்த சிங்காரத்தோப்பு திருச்சி மக்களுக்கு மட்டும் அல்ல அருகில் உள்ள மாவட்டம், கிராமங்கள், நகரங்கள் என எல்லா மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. சுற்றுப்புறத்தில் உள்ள கிராம மக்கள், நகர மக்கள் அனைவரும் குறைந்த விலையில் சிறந்த பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் சிங்காரத்தோப்பை தான் தேடி வருகின்றனர்.
திருச்சி மலைக்கோட்டை, தெப்பக்குளம் ,போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளும் இங்குதான் அமைந்துள்ளது. மேலும், சிங்காரத்தோப்பு திருச்சியின் வர்த்தக மையமாக கருதப்படுகிறது. சென்னையில் தியாகராயநகர் எப்படியோ அதேபோன்றுதான் திருச்சியில் சிங்காரத்தோப்பு, இங்கு எப்போதுமே பரபரப்பாக இருக்கும். மக்களும் அதிகம் கூடும் இடம். கல்லூரி மாணவ, மாணவிகள் என்று அனைவருமே தங்களுக்கு தேவையான புத்தகங்கள், பேனாக்கள் என அனைத்து விதமான பொருட்களையும் வாங்குவதற்கு சிங்காரத்தோப்பிற்கு தான் வருகிறார்கள்.
சிங்கார தோப்பிற்கு வந்தால் நமக்கு என்ன என்ன வேண்டுமோ அவை அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என்பதாலும், சற்று களைப்பாக இருந்தால் அருகில் உள்ள சிறிய உணவகங்கள், ஐஸ்க்ரீம் கடைகள், பழச்சாறு கடைகளில் உள்ளவற்றை வாங்கி சாப்பிட்டுக் கொண்டும், அருந்திக் கொண்டும் செல்லலாம் என்பதாலும் சிங்காரத்தோப்பு என்றாலே பள்ளி, கல்லூரி ,மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மின்சாதனப் பொருட்கள், மின்விளக்குகள், மின்விசிறிகள், மொபைல் கடைகள், டிவி ரிமோட் கடைகள், மின்சாதன பொருட்கள் பழுதுபார்க்கும் கடைகள் பாத்திரக் கடைகள், ஆபரணக் கடைகள் உள்ளிட்ட கடைகளும் இங்கு அமைந்துள்ளன. இதுமட்டுமல்லாமல் மளிகை பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், புத்தகங்கள், துணிகள் என இல்லை என்று சொல்வதற்கு எதுவுமே இல்லாமல் அனைத்து கடைகளையும் தன்னுள் கொண்டுள்ள ஒரு மையமாக சிங்காரத்தோப்பு திகழ்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கும் விளையாட்டுப் பொருட்கள் ,முதல் ஆடைகள் வரை அனைத்தும் இங்கு குறைந்த விலையில் கிடைக்கிறது. பழைய புத்தகக் கடைகள் தான் இங்கு இருக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இங்கு ஆரம்ப பள்ளி முதல் ஐஏஎஸ் தேர்வு வரை தேவையான அனைத்து புத்தகங்களும் குறைவான விலையில் கிடைக்கிறது. இங்கு அனைத்தும் மலிவான விலையில் கிடைப்பதால் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக சிங்காரத்தோப்பு அமைந்துள்ளது. சிங்கார தோப்பிற்கு வந்தால் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை சுற்றிப் பார்ப்பது மட்டுமல்லாமல், தேவையானவற்றை வாங்கிக் கொண்டும் செல்லலாம் என்பது திருச்சி மக்களுக்கு மட்டுமல்ல சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்பதில் சந்தேகமில்லை. சென்னையில் தி நகர் எப்படி ஒரு பெரிய வர்த்தக மையாக திகழ்கிறதோ, அதே போன்று திருச்சியில் சிங்காரதோப்பு திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆனால் கொரானா காலகட்டம் என்பதால் மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதும் தொற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகையால் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதே அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.