(Source: Poll of Polls)
காங்கிரஸ் கட்சி இனி இருக்காது, அதனால் பாஜகவிற்கு விஜயதாரணி சென்றுவிட்டார் - சீமான்
பா.ஜ.க.,வினர் ஒரு கையில் நோட்டு பெட்டியும் மற்றொரு கையில் வாக்கு பெட்டியும் வைத்துள்ளார்கள். அவர்கள் எத்தனை சீட்டு வெல்வோம் என கூறுகிறார்களோ அத்தனையும் வெல்வார்கள் - சீமான்
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துவிட்டது. தமிழ்நாட்டில் 31 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையே அறிவித்துவிட்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். விரைவில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களை பொதுக்கூட்ட மேடையில் நிறுத்தி மக்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறார் சீமான். வேட்பாளர்கள் பெயருடன், கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது. ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதே கேள்விக்குறி என்ற நிலை உள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடமும் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்துள்ளனர். கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் போஸ்டர்களை அடித்து ஒட்டி வருகின்றனர் நா.த.க.,வினர். இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கூட்டணிக்கு கட்சிகளிடத்தில் அழைப்பு வந்ததா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்துப் பேசிய அவர், அழைப்பு வராமல் என்ன செய்யும்? பொது மேடையிலும் அழைப்பார்கள். தனிப்பட்ட முறையிலும் சந்தித்து கூட்டணிக்கு அழைப்பார்கள். ரகசியமாக வந்து சந்திப்பதை பொதுவில் வெளியிடுவது மாண்பு அல்ல. ரகசியமாக நடந்த சந்திப்புகளை இவர்கள் வந்து பேசினார்கள், அவர்கள் வந்து பேசினார்கள் என்று சொல்வது நாகரீகம் இல்லை. என்னைய மன்னார்குடியில கேட்டாக, மாயவரத்துல கேட்டாக, மயிலாப்பூர்ல கேட்டாக.. என கூவிக் கூவி வியாபாரம் செய்யும் வேலையா? எனக் கேள்வி எழுப்பினார் சீமான். மேலும், மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். ஆனால், நான் போட்டியிடப் போவதில்லை. நான் இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான ஆள். எனது கட்சிப் பிரதிநிதிகள் டெல்லிக்குச் செல்வார்கள். தொடர்ந்து பேசிய சீமான், அரை நூற்றாண்டுகளாக இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், இப்போது சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த கோரிக்கை வைப்பது ஏன்? இவ்வளவு நாள் கோமாவில் இருந்தார்களா? என்றார்.
காங்கிரஸ் கட்சி இனி இருக்காது, அதனால் பா.ஜ.க.,விற்கு செல்லலாம் என்கிற நினைப்பில் விஜயதாரணி அங்கு சென்று இருக்கலாம். வாக்கு இயந்திரத்தை வைத்து தேர்தல் நடக்கும்போது முடிவு மக்கள் கையில் இருக்காது. பா.ஜ.க.,வினர் ஒரு கையில் நோட்டு பெட்டியும் மற்றொரு கையில் வாக்கு பெட்டியும் வைத்துள்ளார்கள். அவர்கள் எத்தனை சீட்டு வெல்வோம் என கூறுகிறார்களோ அத்தனையும் வெல்வார்கள் எனக் காட்டமாகப் பேசினார் சீமான். நாம் தமிழர் கட்சியின் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக 'ஜல்லிக்கட்டு ராஜேஷ்' போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.