Monkey pox: புதுக்கோட்டையில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி.. சோதனை முடிவுக்கு காத்திருப்பு
குரங்கு அம்மையின் இறப்பு விகிதம் பொது மக்களில் 0 முதல் 11 சதவீதம் வரை உள்ளது. ஆனால் சிறு குழந்தைகளிடையே அதிகமாக உள்ளது.
சிங்கப்பூரில் இருந்து வந்த புதுக்கோட்டை வாலிபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தை சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஸ்கூட் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அவருக்கு விமானநிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது குரங்கு அம்மை தொற்று நோய்க்கான அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து, அந்த பயணியை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு விமான நிலைய மருத்துவ குழுவினர் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நோய் பாதிப்பு ஒன்றும் இல்லை, அதனால் பயப்பட வேண்டாம் என டாக்டர் ஒருவர் அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனால் அவர் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆகாமல் சொந்த ஊருக்கு சென்றார். இதற்கிடையே மருத்துவமனையில் அந்த வாலிபர் இல்லாததால் புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த நபரின் முகவரியை வைத்து அதிகாரிகள் நேற்று அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரிடம் பேசி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்தபின்தான் அவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும் என அதிகாரிகள் கூறினர்.
மேலும் இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டப்போது, குரங்கு அம்மை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு நெருங்கிய உடல் தொடர்பு மூலம் பரவுகிறது. குரங்கு அம்மை ஏற்பட்டவருக்கு உள்ள சொறி, சிரங்குகள் இன்னொருவருக்கும் பரவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் குரங்கு அம்மை இருக்கும் விலங்குகளுடன் நெருக்கமாக பழகும் நபர்களுக்கு இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது என்றனர். மேலும் குரங்கு அம்மை அறிகுறிகள் பெரியம்மை அறிகுறிகளைப் போலவே இருக்கும், ஆனால் லேசானவை. மேலும் இந்த நோய் அவ்வளவு ஆபத்து கொண்டது கிடையாது. இதனால் ஏற்படும் அறிகுறிகள் பொதுவாக 14-21 நாட்களுக்குள் நீடிக்கும். குரங்கு அம்மையின் இறப்பு விகிதம் பொது மக்களில் 0 முதல் 11 சதவீதம் வரை உள்ளது. ஆனால் சிறு குழந்தைகளிடையே அதிகமாக உள்ளது. சமீபத்திய காலங்களில், இறப்பு விகிதம் சுமார் 3-6% ஆக உள்ளது. குறிப்பாக மக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் நோய் அறிகுறிகள் உள்ளவர்களிடம் இருந்து தனித்து இருக்கவேண்டும். மேலும் அடிக்கடி உடலை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும் என அறிவுறைகளை வழங்கினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்