கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் சேதமடைந்த பழைய நீரேற்று நிலையம் - சீரமைக்க ரூ.3 கோடியில் திட்ட மதிப்பீடு
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் சேதமடைந்த பழைய நீரேற்று நிலையத்தை சீரமைக்க ரூ.3 கோடியில் திட்ட மதிப்பீடு தயார்- அதிகாரிகள் தகவல்.
திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்று படுகையில் திருவெறும்பூர் கூட்டு குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இது திருச்சி மாவட்டத்தில் உள்ள குடிநீர் திட்டங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த நீரேற்று நிலையம் மூலமாக தினமும் 17 ஆயிரத்து 296 மில்லியன் லிட்டர் குடிநீர் திருச்சி மாநகராட்சியுடன் சமீபத்தில் இணைக்கப்பட்ட திருவெறும்பூர், காட்டூர் மற்றும் அரியமங்கலம் பகுதியில் உள்ள 6 மாநகராட்சி வார்டு மக்களுக்கும், துவாக்குடி நகராட்சி சேர்ந்த அனைத்து வார்டு மக்களுக்கும், கூத்தப்பார் பேரூராட்சி மக்களுக்கும், அது மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் உள்ள 90 குடியிருப்பு பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நீரேற்று நிலையம் சமீபத்தில் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கடந்த 22-ந்தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து தற்காலிகமாக அதனை சீரமைக்கும் பணிக்காக ரூ.3 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீரை ராட்சத குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லும் பாலம் கடந்த அக்டோபர் 14-ந்தேதி சேதம் அடைந்தது. மேலும் ஆற்றில் ஏற்பட்ட வலுவான நீரோட்டம் காரணமாக ஏற்பட்ட அரிப்பினால் பாலத்தின் தூண்களில் ஒன்றும் கீழே விழுந்து விட்டது.
இதனால் பாலத்தில் இருந்து நீர்வழிப் பாதை சேதமடைந்தது.பின்னர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தற்காலிகமாக சீர் செய்து அக்டோபர் 20-ந்தேதி முதல் குடிநீர் விநியோகிக்கும் பணியை தொடங்கினர். ஆனால் நீர் விநியோகம் சீரமைக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் மறுபடியும் அக்டோபர் 22-ந்தேதி பாலம் மேலும் சேதம் அடைந்ததால் குடிநீர் விநியோகத்தை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். அதை சரி செய்த பிறகு அக்டோபர் 23-ந்தேதி மீண்டும் தண்ணீர் விநியோகத்தை தொடங்கினர். ஆனாலும் பாலத்தில் மேலும் இரண்டு தூண்கள் கீழே இறங்கி விட்டதால் அவர்களால் அதை தொடர முடியவில்லை. பின்னர் பல தொழில்நுட்ப வழிமுறைகளை கையாண்டு சீரமைத்து ஓரளவுக்கு தண்ணீர் உபயோகித்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டால் மேலும் இந்தத் திட்டம் தடைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழைக்கு பின்னர் நிரந்தரமாக மேற்கண்ட குடிநீர் திட்ட பணிகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சேதுமடைந்த இரும்பு குழாய்கள் தற்காலிக நடவடிக்கையாக அதிக அடர்த்தி கொண்ட பாலி எத்திலின் குழாய்களாக மாற்றப்பட உள்ளன. மேலும் சில பணிகளை உடனடியாக மேற்கொள்ள இருப்பதாகவும், முதற்கட்ட மதிப்பீட்டின்படி ரூ.3 கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கும் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்