Lok Sabha Elections 2024 : தி.மு.க., பா.ஜ.க.வை மக்கள் ஒற்றை விரலால் ஓங்கி அடித்து விரட்டுங்கள் - நடிகை விந்தியா
தி.மு.க. பயங்கரமாக பொய் சொல்லும் என்றும், பா.ஜ.க. சொல்ற பொய்யை பயங்கரமா சொல்லும் என்று அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் விந்தியா கடுமையாக விமர்சித்துள்ளார்..
Lok Sabha Elections 2024: திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கருப்பையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் திரைப்பட நடிகையும், அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "நீச்சல் தெரியாத ஒருவர் ஓட்டை விழுந்த படகில் பயணம் மேற்கொண்ட கதை போன்று தான் வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார். ஒவ்வொரு தேர்தலிலும் தானும் தோற்று, தன்னோடு இருப்பவர்களையும் தோற்கடிக்கும் பவர் தான் வைகோ. அவருடைய மகன் துரை வைகோவிற்கு நீங்கள் வாக்களித்தால் நாடாளுமன்றத்திற்கு சென்று அப்பாவை நினைத்து அழுது கொண்டு இருப்பாரே தவிர, மக்கள் பிரச்சனையை பேச மாட்டார். துரை வைகோவை தி.மு.க. கட்சியினரே திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தோற்கடித்து விடுவார்கள். விஜயபாஸ்கருக்கு ஜல்லிக்கட்டு தெரியும், மல்லுக்கட்டும் தெரியும். EDக்கும் பயப்பட மாட்டார், உதயநிதி ஸ்டாலினுக்கும் பயப்பட மாட்டார். நாம் ஒரு ரூபாய் வரி கட்டினால் 50 சதவீதம் மத்திய அரசுக்கும், 50% மாநில அரசுக்கும் செல்கிறது.
மகளிர் தகுதி இல்லாதவர் என்று பிரிப்பதற்கு இவர் யார்?
மேலும், மத்திய அரசு 29 பைசா மட்டுமே தருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார். மாநில அரசுக்கு வரும் 50 சதவீதத்தில் மக்கள் நல திட்டங்கள், எதை நீங்கள் நிறைவேற்றினீர்கள்.மேலும் தேர்தல் நேரத்தில் அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று கூறிவிட்டு, தற்போது தகுதியுடைய பெண்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் தரப்படும் என்று ஸ்டாலின் கூறி வருகிறார்.
இது அவர்கள் அப்பன் வீட்டு காசா, அடுத்தவன் பொண்டாட்டியை தகுதி உள்ளவர், தகுதி இல்லாதவர் என்று பிரிப்பதற்கு இவர் யார்? தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் மாற்று என்று பாஜக கூறி வருகிறது. ஆனால் பாஜக மாற்றுக் கட்சி அல்ல ஏமாற்றும் கட்சி. திமுகவிற்கும் பாஜகவிற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. திமுக பயங்கரமாக பொய் சொல்லும், பாஜக சொல்ற பொய்யை பயங்கரமா சொல்லும். திராவிட மாடல் என்று ஏமாற்றும் திமுகவையும், இந்திய மாடல் என்று ஏமாற்றும் பாஜகவையும் தோற்கடிக்க வேண்டும்.
சதிகார தி.மு.க.வையும், சர்வாதிகார பாஜகவையும் தோற்கடிக்க வேண்டும்
தி.மு.க. கடவுளை திட்டிக்கொண்டே சாமி கும்பிடும். பா.ஜ.க. கடவுளே திட்டுற மாதிரி சாமி கும்பிடும். ஸ்டாலின் மகனைப் பற்றி மட்டுமே யோசனை செய்வார். மோடி மதத்தை மட்டுமே பற்றி யோசனை செய்வார். ஸ்டாலின் மகன், மகள், மருமகனுக்கு பினாமி, மோடி அம்பானி, அதானிக்கு பினாமி. திமுக மக்களிடம் மட்டுமே திருடுவார்கள். பாஜக மாநிலங்களை மட்டுமே திருடுவார்கள்.திமுக திருட்டில் ஸ்பெஷலிஸ்ட். பாஜக உருட்டுவதில் ஸ்பெஷலிஸ்ட். இரண்டு பேருமே நாட்டிற்கு ஆபத்தானவர்கள். இந்த தேர்தலில் திருந்தாத பாஜகவையும் திருட்டு திமுகவையும் ஒழித்துக் கட்டுவதற்கு பொதுமக்கள் தங்களது ஒற்றை விரலால் ஓங்கி அடிக்க வேண்டும். சதிகார திமுகவையும் சர்வாதிகார பாஜகவையும் தோற்கடிக்க வேண்டும்.
மக்களை மதிக்காத திமுகவையும், மதவெறி பிடித்த பாஜகவையும் ஒழிப்பதற்கு ஓங்கி பொதுமக்கள் ஒற்றை விரலால் அடிக்க வேண்டும். ரவுடியை வைத்து மிரட்டும் திமுகவையும், EDயை வைத்து மிரட்டும் பாஜகவையும் தோற்கடிக்க பொதுமக்கள் தங்களது ஒற்றை விரலால் ஓங்கி அடிக்க வேண்டும், எனக் கூறினார்.