திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் டிராக்டர்களை சாலையில் நிறுத்தி விவசாயிகள் போராட்டம்
நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரிக்கை
தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடி நெல் கொள்முதல் செய்ய வேண்டும். 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் விவசாயிகளை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர். மேலும் தமிழக அரசு விவசாயிகளின் நெல்களை ஆன்லைன் மூலம் கொள்முதல் செய்வதால் பல்வேறு குளறுபடிகள் நடப்பதால் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறும் முறைகள் ரத்து செய்ய வேண்டும். மத்திய அமைச்சர் அமித்ஷாவை கடந்த 2009 ஆம் ஆண்டு சந்தித்து கோதாவரி நதியில் இருந்து 250 டிஎம்சி தண்ணீரை தமிழக நதிகள் பாலாறு, தென்பெண்ணை, காவிரி, வைகை, குண்டாறு ஆகிய நதிகளை இணைப்பதற்கு வாக்குறுதி கொடுத்து இதுவரை நிறைவேற்றாமல் காலதாமதம் படுத்தி வருகிறார்கள் என்றனர்.
மேலும் மேகதாது அணையை காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நெல் குவிண்டாலுக்கு 5000 ரூபாயும்ம், ஒரு டன் கரும்புக்கு 8000 ரூபாயும் மத்திய அரசு கொடுத்தால்தான் கட்டுப்படியாகும் இதனை வலியுறுத்தும், நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் உள்ள விவசாயிகளை விவசாய வேலைக்கு பயன்படுத்த வேண்டும். விவசாயிக்கு காப்பீட்டு தொகையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றிட வேண்டும் என 20க்கும் மேற்பட்ட டிராக்டர் மூலம் திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து சென்னையை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வல போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி தராததால் மாருதி நகர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் விவசாயிகள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் 20க்கும் மேற்பட்ட டிராக்டர்களை நடுரோட்டில் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் 1 மணி நேரத்திற்கு மேலாக பெரும் பரபரபாக காணப்பட்டது.
இதனால் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தை சரி செய்யும் விதமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப் பாதையாக மாற்றி வாகனங்களை ஒரு வழிப்பாதையில் அனுப்பப்பட்டது. மற்றொரு வழியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். குறிப்பாக வருகிற மார்ச் மாதம் 5,000 விவசாயிகளுடன் நீதிமன்ற உத்தரவை பெற்று டெல்லியில் மிகப்பெரிய அளவில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.