கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் இலவச பயணம்..!
கும்பகோணம் கோட்டபோக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட 12 மாவட்டங்களில் இதுவரை 1.81 கோடி பெண்கள் நகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் முதல்வராக கடந்த மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற உடன் தமிழகம் முழுவதும் நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்பது உள்ளிட்ட 5 அறிவிப்புகளில் முதல் கையெழுத்திட்டிருந்தார். இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட 1200 கோடி மானியம் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசுத்தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில், சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பணிபுரியும் மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கி அரசு ஆணையிட்டிருந்தது.
பெண்களுக்கான இத்திட்டம் வரவேற்பை பெற்றநிலையில் மாற்றுத்திறனாளிகள், அவர்களின் உதவியாளர்கள், திருநங்கைகள் ஆகியோரும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கும்பகோணம் போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட பேருந்துகள் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, காரைக்கால், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 12 மாவட்டங்களில் 1,225 சாதாரண நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பேருந்துகள் மூலம் இதுவரை 1 கோடியே 81 லட்சத்து 38 ஆயிரத்தி 639 பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்துள்ளனர்.
இதில் கும்பகோணம் மண்டலத்தில் 30,18,484 பேர், திருச்சி மண்டலத்தில் 73,40,163 பேர், கரூரில் 12,57,992 பேர், புதுக்கோட்டையில் 21,46,325 பேர், காரைக்குடியில் 30,58,164 பேர், நாகையில் 13,17,511 பேர் என 1 கோடியே 81லட்சத்து 38 ஆயிரத்து 639 பேர் பயணம் செய்துள்ளனர். இதைதவிர்த்து மாற்றுதிறனாளிகளில் கும்பகோணம் மண்டலத்தில் 9,607 பேர், திருச்சி மண்டலத்தில் 51,049 பேர், கரூரில் 8,942 பேர், புதுக்கோட்டையில் 7,695 பேர், காரைக்குடியில் 12,836 பேர், நாகையில் 3,373 பேர் என மொத்தம் 93,502 பேர், திருநங்கைகளில் கும்பகோணம் மண்டலத்தில் 1,167 பேர், திருச்சி மண்டலத்தில் 3,261 பேர், கரூரில் 1,361 பேர், புதுக்கோட்டையில் 516 பேர், காரைக்குடியில் 706 பேர், நாகையில் 736 பேர் என மொத்தம் 7,747 பேர் பயணம் செய்துள்ளனர்.
கும்பகோணம் கோட்ட போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட 12 மாவட்டங்களில் இதுவரை 1.81 கோடி பெண்கள் நகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்துள்ளனர். மொத்த பயணிகளின் எண்ணிக்கையில், பெண்களின் சதவீதம் 60 ஆக உயர்ந்துள்ளது, என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.