அங்கு நிலம் இருந்தால் பழனிசாமியே எடுத்துக்கட்டும்: அமைச்சர் கே.என்.நேரு கொடுத்த பதிலடி
எனது பெயரிலோ, என்னைச் சார்ந்தவர்கள் பெயரிலோ நிலங்கள் இருந்தால், அதை அரசே கையகப்படுத்திக் கொள்ளலாம். நானே கையெழுத்திட்டு தருகிறேன்.

திருச்சி பஞ்சப்பூர் அருகே எனக்கு நிலம் இருந்தால் எடப்பாடி பழனிசாமியே எடுத்துக் கொள்ளலாம் என்று பதிலடியாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?
திருச்சி மேலப்புதூர் பிலோமினாள் பள்ளியில் முதல்வரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கிவைத்து, குழந்தைகளுடன் அமர்ந்து அமைச்சர் கே.என்.நேரு. உணவு சாப்பிட்டார். பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
துறையூரில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்தது. நோயாளியை காப்பாற்றுவதற்காகவே தவிர, வேறு எந்த நோக்கத்துக்காகவும் அல்ல. துறையூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டதற்கு அதிமுகவினரே காரணம். அவர்களே 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து வரவழைத்து தாக்கியதாக காவல்துறை தரப்பில் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பஞ்சப்பூர் பகுதியில் எனக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதால்தான், அங்கு பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதைப்போல, அங்கு எனது பெயரிலோ, என்னைச் சார்ந்தவர்கள் பெயரிலோ நிலங்கள் இருந்தால், அதை அரசே கையகப்படுத்திக் கொள்ளலாம். நானே கையெழுத்திட்டு தருகிறேன். வேண்டுமென்றால் பழனிசாமியே அந்த நிலத்தை எடுத்துக் கொள்ளலாம்.
எங்களுடைய கட்சித் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நான் இணக்கமாகத்தான் உள்ளேன். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் பழனிசாமிக்கும், தங்கமணிக்கும் இடையேதான் பிரச்சினை நிலவுவதாக அதிமுக நிர்வாகிகளே வெளிப்படையாக கூறி வருகின்றனர். தமிழகத்தில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு பணிகளும் சரியான முறையில் முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
அண்மையில் திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ள இந்த புதிய நிலையத்தை சுற்றி ரியல் எஸ்டேட் தொழில் உச்சத்தில் இருந்து வருகிறது. அதேபோல் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளதால், திருச்சியின் வளர்ச்சியும் அடுத்தக் கட்டத்தை நோக்கி உயர்ந்துள்ளது.
இந்நிலையில் திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி பேருந்து நிலையம் அமைச்சர் நேருவின் நிலத்தின் மதிப்பு உயர வேண்டும் என்பதற்காகவே பஞ்சப்பூரில் கட்டப்பட்டது. சிதம்பரம் செட்டியார் அன்னதான டிரஸ்டுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம், அதிகாரத்தை பயன்படுத்தி அபகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் குழந்தை முதலியார் தோட்டத்தில் உள்ள 18 ஏக்கர் கோயில் நிலத்தை ஜி ஸ்கொயர் நிறுவனம் முறைகேடாக பதிவு செய்துள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்த உடன், அந்த சொத்துக்கள் மீட்கப்படும் என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த குற்றச்சாட்டுக்குதான் அமைச்சர் கே.என்.நேரு மேற்கண்டவாறு பதிலடி கொடுத்துள்ளார்,






















