திமுகவில் உழைத்து முதல்வர் பதவிக்கு வந்தவர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் கே.என்.நேரு
இந்த நிறுவனம் அனைவருக்கும் ஆனது நம்மளுடைய நிறுவனம் உங்களுடைய நிறுவனம். இந்த நிறுவனம் நூறாண்டுகள் கடந்து செல்லும் - கி.வீரமணி பேச்சு
திருச்சி மாநகர், கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலை ப் பள்ளியின் 50 வது ஆண்டு பொன்விழா நடைபெற்றது. பெரியார் மணியம்மை கல்வி நிறுவனங்களின் தலைவரும், திராவிட கழகத்தின் தலைவருமான கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற 50வது ஆண்டு பொன் விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த ஆண்டு விழாவில் பெரியார் குறித்த நாடகங்கள் மற்றும் பள்ளி வரலாறு குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு.. தந்தை பெரியார் அவர்கள் திருச்சிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போதும், பின்பு வந்த போதும் நான் பார்த்திருக்கிறேன் அவர் பேச்சைக் கேட்டு இருக்கிறேன் என்னை வளர்த்து ஆளாக்கி அமைச்சர் ஆக்கியது கலைஞர் அவர்கள் தான்.
இந்தப் பள்ளி விழாவிற்கு கலைஞர் அவர்கள் வந்த போது ஏன்யா..நேரு .. இந்த பள்ளி ஆசிரியர் கி.வீரமணியிடம் இல்லை என்றால் என்றைக்கோ அழிந்து போய் இருக்கும் என கூறினார். நடுத்தர மக்கள் பயிலும் வகையில் கல்லூரி துவங்க வேண்டும் என பெரியார் நினைத்தபொழுது அரசு உதவியுடன் துவங்குங்கள் என கூறியவர் காமராஜர். இந்தியாவில் எத்தனையோ இயக்கங்கள் இருக்கிறது.காங்கிரஸ் உள்ளிட்ட எத்தனையோ இயக்கங்கள் இருக்கிறது ஆனால் கல்லூரியை உருவாக்கி மாணவர்களே உருவாக்க வேண்டும் என்று இருக்கின்ற ஒரே கழகம் திராவிட கழகம் மட்டும்தான். எங்களிடம் தலைவர் சொல்லுவார் ஒவ்வொரு தொண்டனும் சிறை செல்ல வேண்டும் என்பது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான பங்கு இருக்கிறது என சொல்வார்கள்.
எங்களையும் சிறையில் அடைத்தார்கள் முதலில் சிறைக்கு செல்லும் பொழுது அச்சமாகத்தான் இருந்தது. போகப் போக சரியாகி விட்டது. நான் சிறையில் இருக்கும் பொழுது தலைவர் சொன்னார் இதெல்லாம் அரசியலில் படிப்பினை என்றார், இப்படி எல்லாம் எங்களை உருவாக்கிய முன்னோர்கள் கி.வீரமணி அவர்கள், அண்ணா ,கலைஞர் அவர்கள் தான். நம்முடைய முதல்வர் அவர்களும் ஒரு வருட மிசா கைதி. நம்முடைய முதல்வரை வாரிசு அரசியல் என சொல்கிறார்கள் அப்படியெல்லாம் சொல்ல முடியாது அவர்கள் உழைத்து வந்திருக்கிறார்கள் என பேசினார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்... தந்தை பெரியார் தமிழர்களை தலை நிமிர வைத்தார், தந்தை பெரியார் தமிழர்களை படிக்க வைத்தார், தந்தை பெரியார் தமிழை வாழ வைத்தார் தந்தை பெரியார் தமிழர்களை ஆள வைத்தார். தந்தை பெரியார் பிற்போக்கு சக்திகளை விரட்டியடித்தார் என்று சொல்லலாம். பெரியார் மணியம்மை பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். ஆயுதமும், காகிதமும் பூஜை அல்ல, அது புரட்சி செய்வதற்கு என பெரியார் கூறி கடைசி வரை ஆயுதத்தை கையில் எடுக்காமல் கொள்கையில் குறிக்கோளாக இருந்தவர் பெரியார்.
மேலும், ஒட்டு மொத்த ஒன்றிய இந்தியாவில் உயர்கல்வியில் 35.7 மில்லியன் இதில் மாணவிகள் 16.7 மில்லியன் என்றால் இதை தான் பெரியார் செய்தார் என்று நாங்கள் பெருமையோடு கூறுவோம். தந்தை பெரியார் பிறந்து 91 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் பிறந்தவர் தான் இந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்பதில் எனக்கு பெருமை. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் பேசும் போது என்னுடைய சொந்த மாவட்டத்தில் பேசுவது போல் உள்ளது என கூறினார். அந்த உதயநிதி ஸ்டாலின் பிறந்த நவம்பர் 27 அன்று தான் ஐயா கி. வீரமணி அவர்கள் திராவிட கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இந்த ஒற்றுமை எங்களுக்கும் திராவிட கழகத்திற்கும் எப்போதும் இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இவ்விழாவில் கி. வீரமணி பேசுகையில்.. ஊர் பெயர்கள் வைக்கும் பொழுது நீளமான பெயர்களை வைக்காதீர்கள், கே.கே நகர், டி.நகர் சுருக்கமாக கூறுகின்றனர் இதில் விஷமம் இருக்கிறது.பெரியார் மணியம்மை பள்ளியில் படித்தவர்கள் பல்வேறு துறைகளில் வேலையில் இருக்கின்றனர்.50 ஆண்டுகால வரலாற்றில் இந்த பள்ளியில் வேலை நிறுத்தம் என்று மாணவர்களும், ஆசிரியர்களோ ஈடுபட்டதே இல்லை. பத்திரிக்கையாளர் சோ என்னிடம் ஒருமுறை பேசும் பொழுது நீங்கள் பள்ளிக்கூடம் நடத்துகிறீர்கள் என்ன வியாபாரமா எனக் கேட்டார். உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம் வந்து நேரில் பாருங்கள் என கூறினோம், அவரும் நேரில் வந்து பார்த்தார் எங்களிடம் உணவு அருந்தினார். உறவினர் வீட்டிற்கு இடையில் சென்று வந்த சோ எங்களிடம் கூறும்போது எந்த பேதமும் இருக்கிறதா என உறவினர்களிடம் விசாரித்தார். ஆனால் பெரியார் மணியம்மை பள்ளியில் அப்படி எந்த பேதமும் இல்லை என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். பிராமணர்கள் என்பதால் அங்கு எந்த நிர்பந்தமும் இல்லை என தெரிவித்தனர். இதே போல சங்கராச்சாரியார்களிடம் கூறி பள்ளி நாங்களும் துவங்குவோம் என சோ கூறினார். பிராமணர்கள் இந்த பள்ளியில் பயிலலாம் என பெரியார் மணியம்மை பள்ளிக்கு வரும்படி அழைத்தனர். ஆனால் யாரும் வரவில்லை, இந்த நிறுவனம் அனைவருக்கும் ஆனது நம்மளுடைய நிறுவனம் உங்களுடைய நிறுவனம். இந்த நிறுவனம் நூறாண்டுகள் கடந்து செல்லும் என கூறினார்.