Lok Sabha Election 2024: ஊழல் செய்வதில் திமுகவினரை மிஞ்ச எவருமில்லை - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
முதல் முறையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லாமல் ஒரு பொதுக்கூட்டத்திற்கு வந்துள்ளேன் - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தமிழகத்தில் முதல் கட்ட தேர்தலாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என முனைப்பில் உள்ளனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டும் 40 வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, புதிய தமிழகம் கட்சி தவைவர் கிருஷ்ணசாமி, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் கலந்து கொண்டு உரை ஆற்றினார்கள். இந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசுகையில், “அ.தி.மு.க - தேமுதிக கூட்டணி இயற்கையான கூட்டணி, வெற்றி கூட்டணி. முதல் முறையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லாமல் ஒரு பொதுக்கூட்டத்திற்கு வந்துள்ளேன். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மீண்டும் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் மூவரும் திரை உலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். அவர்கள் மூவரும் மக்களால் ஈர்க்கப்பட்டவர்கள். மூவரும் டிசம்பர் மாதத்தில் இறந்தனர். ஆகையால் எடப்பாடி பழனிசாமியும் நாங்களும் அமைத்துள்ளது ராசியான கூட்டணி, வெற்றி கூட்டணி. மூன்று தலைவர்களும் எந்த தீமையானவற்றையும் கற்று தரவில்லை. ஆனால் மாற்று கட்சியில் இருப்பவர்கள் சட்டம் ஒழுங்கை சீரழித்து தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார்கள். 2021 ல் இந்த கூட்டணி அமைந்து மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகி இருப்பார், ஆனால் சற்று கால தாமதமாகி விட்டது. 2011ல் இதே கூட்டணி தான் அமைந்து சரித்திர வெற்றி பெற்றோம், அந்த வெற்றி 2026ல் மீண்டும் கிடைத்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார்.
துளசி கூட வாசம் மாறும் தவசி வார்த்தை மாறாது
மேலும், நாங்கள் கூட்டணியில் தான் இருக்கிறோம் என கூறியவர்கள் கடைசி நேரத்தில் தங்களுக்கு வேண்டியது கிடைத்த உடன் கூடாரத்தை காலி செய்து விட்டார்கள். ஆனால் தே.மு.தி.க ஒரு வாக்குறுதி அளித்தால் அதில் உறுதியாக இருப்போம். நியாயத்திற்கும் தர்மத்திற்கும் தான் துணை நிற்போம். துளசி கூட வாசம் மாறும் தவசி வார்த்தை மாறாது.உறுதியாகவும் இறுதியாகவும் இந்த கூட்டணி தொடரும். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மணல் கொள்கை, கஞ்சா விற்பனை தலை விரித்தாடுகிறது. பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடக்கிறது, சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது. தன்னை யோக்கியனாக காட்டி கொள்ளும் முதலமைச்சர் கஞ்சா கடத்தும் தி.மு.க வினரை சிறை வைக்க வேண்டும். முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றாலும் சிறப்பாக ஆட்சி செய்தார் எடப்பாடி பழனிசாமி.
எதற்கெடுத்தாலும் மத்திய அரசை தி.மு.க குறை சொல்கிறது. ஆனால் பத்தாண்டு கால ஆட்சியில் மழை வெள்ளம் வந்த போதும் கொரோனா காலத்திலும் சிறப்பாக கையாண்டார். மத்திய அரசை அவர் எதிர்ப்பார்க்கவில்லை.1000 ரூபாய் வழங்க முதலமைச்சர் மகளிருக்கு தகுதி பார்க்கிறார். அவரை முதலமைச்சராக இருக்க தகுதி இருக்கிறதா என பெண்கள் கேட்கிறார்கள். பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்டவை விலையை மத்திய அரசு தான் குறைக்க முடியும். ஆனால் நாங்கள் குறைப்போம் என தி.மு.க பொய் வாக்குறுதி அளித்துள்ளார்கள்.
சிறுபான்மை மக்களுக்கு முழு ஆதரவாக அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி இருக்கும். சி.ஏ.ஏ குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அப்பொழுது தான் அதை ஏற்று கொள்வதா வேண்டாமா என்பதை எங்கள் கூட்டணி முடிவு செய்யும். தேர்தல் பத்திரம் மூலம் இந்தியாவிலேயே அதிக நன்கொடை பெற்றது பா.ஜ.க முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க தான் முதலிடத்தில் உள்ளது. 2026க்கு பிறகு தி.மு.க வே தமிழ்நாட்டில் இல்லை என்கிற நிலையை நாம் உருவாக்க வேண்டும்” என்றார்.