ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் தீவிரம்; ஸ்ரீபுண்டரிகாக்ஷ பெருமாள் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம்- அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திருக்கோவில்களில் நடைபெற்று வரும் பணிகளையும், புதிய திட்டங்களையும் அமைச்சர்கள் நேரு மற்றும் சேகர பாபு தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், திருப்பட்டூர், அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் ரூபாய் 31.95 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாாகக் கட்டப்பட்டுள்ள திருக்கோயில் அலுவலகக் கட்டடத்தினையும், ரூபாய் 89.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடத்தினையும் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்து, திருவெள்ளறை அருள்மிகு ஸ்ரீபுண்டரீகாஷ பெருமாள் திருக்கோவிலில் ரூபாய் 7.85 கோடி மதிப்பீட்டில் வடக்கு ராஜகோபுரம் கூடுதல் 5 நிலைகள் கட்டும் கட்டுமான திருப்பணிகளை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு பேசியது..
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு பிரம்மனுக்கு என தனியாக சன்னதி கொண்ட கோயில் என்பதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு தினந்தோறும் அன்னதானம் சாப்பிடும் பக்தர்கள் வசதிக்காக, கோயில் எதிரே, ரூபாய் 89.6 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அன்னதான கூடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதிய அன்னதான கூடத்தில் அமர்ந்திருந்த பக்தர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. மேலும் ரூபாய்.31.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள செயல் அலுவலர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக செய்யப்பட்டு வருகிறது. எப்படி திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு உரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதோ, அதேபோல ஸ்ரீரங்கத்திலும் வெகு சிறப்பாக வைகுண்ட ஏகாதசி திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
திருச்சியில் ரூபாய் 7.85 கோடி மதிப்பீட்டில் திருவெள்ளரை ராஜகோபுரம் கட்டுமான திருப்பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளரையில் அருள்மிகு ஸ்ரீபுண்டரிகாக்ஷ பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உபகோயில் ஆகும். இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெருமாளை சாமி தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வருகை தருகின்றனர்.
இந்த கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருச்சி திருவெள்ளறை அருள்மிகு ஸ்ரீபுண்டரிகாக்ஷ பெருமாள் திருக்கோவிலில் ரூபாய் 7.85 கோடி மதிப்பீட்டில் வடக்கு ராஜகோபுரம் கூடுதல் 5 நிலைகள் கட்டும் திருப்பணி துவக்க விழாவினை நேரில் ஆய்வு மேற்கொண்டு கட்டுமான திருப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்,திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.