Trichy Airport : "மலைக்க வைக்கும் திருச்சி விமான நிலையம்” விரிவாக்கத்தின் முக்கிய அம்சங்கள் உங்களுக்காக..!
70 உள்நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது. இப்படி பிரமிக்க வைக்கிறது ஒருபுறம் என்றால் ஒரே நேரத்தில் புறப்பாடு பகுதியில் 3,500 பயணிகளையும், வருகை பகுதியில் 2,500 பயணிகளையும் கையாள முடியும்

திருச்சி: மலைக்க வைக்கிறது திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் சாதனைகளும், அதன் விரிவாக்க பணிகளும். என்னவென்று பார்ப்போம் வாங்க.
பரபரப்பாக இருக்கும் திருச்சி விமான நிலையம்
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட அரபு நாடுகள் மற்றும் தாய்லாந்து, வியட்நாம் ஆகிய வெளிநாடுகளுக்கும், சென்னை, ஐதராபாத், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை உள்ளது. இதனால் எப்போதும் திருச்சி விமான நிலையம் பரபரப்பாகத்தான் காணப்படும்.
புதிய சாதனை படைத்தது திருச்சி விமான நிலையம்
வாரத்திற்கு சுமார் 100 சர்வதேச விமானங்கள், சுமார் 70 உள்நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது. இப்படி பிரமிக்க வைக்கிறது ஒருபுறம் என்றால் ஒரே நேரத்தில் புறப்பாடு பகுதியில் 3,500 பயணிகளையும், வருகை பகுதியில் 2,500 பயணிகளையும் கையாள முடியும் என்பது அடுத்த பிரமாண்டம் இல்லையா. இதை விட மற்றொரு சாதனை கடந்த பொங்கல் பண்டிகை நேரத்தில் நடந்துள்ளது. என்னன்னா? அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 7 ஆயிரம் பயணிகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. திருச்சி விமான நிலைய ஓடுபாதையின் நீளம் தற்போது 8,136 அடியாக உள்ளது.
ஓடுபாதையை 12,500 ஆக நீட்டிக்கும் திட்டம்
இதனை 12,500 அடியாக நீட்டிக்க வேண்டும் என்பதுதான் விமான நிலைய ஆணையத்தின் திட்டம் ஆகும். 12,500 அடியாக ஓடுபாதை நீட்டிக்கப்பட்டால் அது தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஓடுபாதையாகவும், இந்திய அளவில் ஐந்தாவது பெரிய ஓடுபாதையாகவும் இருக்கும். ஓடுபாதை நீட்டிப்பு பணியை தொடங்குவதற்கு முன்பாக நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் சுமார் 20 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருக்கிறது. இப்படி மலைக்க வைக்கும் திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக, நிலத்திற்கான எல்லைகளை இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) இறுதி செய்துள்ளது. 455 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள வரவிருக்கும் வேலி வேலை, குறுகிய ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்கும் கூடுதல் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் நிலத்தை தயார் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எல்லைக் கற்கள் விரைவில் வைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. தேவையான 497 ஏக்கரில், 455 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு உள்ளன, மீதமுள்ள நிலத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதிக சேவைகளை மேற்கொள்ள ஏதுவாகும்
கடந்த அக்டோபர் 2024 இல், மாவட்ட நிர்வாகம் நுழைவு அனுமதியை வழங்கியது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை AAI கணக்கெடுத்து கையகப்படுத்த அனுமதித்தது. 2009-10ம் ஆண்டில் முதன்முதலில் திட்டமிடப்பட்ட முன்மொழியப்பட்ட ஓடுபாதை நீட்டிப்பு, நீளத்தை 8,136 அடியிலிருந்து 12,500 அடியாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விரிவாக்கம் அதிக பயணிகள் மற்றும் சரக்கு திறன் கொண்ட அகலமான விமானங்களை இயக்க உதவும். ஆசியாவிற்கு அப்பால் புதிய சர்வதேச பாதைகளை இது எளிதாக்குகிறது. இதனால் திருச்சி விமான நிலையம் மேலும் அதிக சேவைகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். குறிப்பாக திருச்சி பகுதியில் இருந்து ஏற்றுமதிக்கு ஒரு புதிய பாதை திறக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு பயன்
காவிரி டெல்டாவில் இப்படி ஒரு சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது வெளிநாட்டு வேலை, படிப்பு போன்றவற்றிற்காக செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். முக்கியமாக தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள், வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் என அனைவருக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது திருச்சி விமான நிலையம். இதன் ஓடுதளம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் போது இன்னும் அதிக சேவைகளை பெற இயலும் என்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

