'ஆதரவற்ற மூதாட்டி, வாட்ஸ்-அப்பில் வந்த தகவல்’ உடனடியாக நடவடிக்கை எடுத்த கரூர் ஆட்சியர்..!
வாட்ஸ்-அப்பில் வந்த ஒரு தகவலை புறந்தள்ளிவிடாமல், தனித்து நின்று தவித்த மூதாட்டியை மீட்க நடவடிக்கை எடுத்த கரூர் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
பெயர் தனபாக்கியம், என்னுடைய மகள் கரூரில் இருக்கிறாள்… இதற்கு மேல் எதுவும் பேசவில்லை அந்த மூதாட்டி. கரூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வெகுநேரம் தனிமையில் அமர்ந்திருந்து எதையோ வெறித்து பார்த்தப்படி இருந்த அவரை கண்டுக்கொண்டது இளைஞர் பட்டாளம், கைக்கொடுத்தது சமூக வலைதளம்.
இந்த மூதாட்டியை அவரது உறவினரிடம் கொண்டுச் சேர்த்திட உதவுங்கள் என வாட்ஸ் –அப், முகநூல் உள்ளிட்ட வலைதளங்களில் பதிவிட்டனர் அங்கிருந்தவர்கள். இந்த செய்தி கரூரில் உள்ள எல்லா வாட்ஸ்- அப் குழுக்களிலும் வலம் வந்தது. இந்த செய்தி கரூர் மாவட்ட ஆட்சியருக்கும் சென்றது.
தனிமையில் தவித்து வரும் மூதாட்டி பற்றி, தன்னுடைய கவனத்திற்கு வந்ததும் ஏனோ தானோ என்று இருந்துவிடவில்லை. உடனடியாக சமூகநலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும், ஒருங்கிணைந்த சேவை மையக் குழுவினரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் ஆட்சியர் பிரபுசங்கர். மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவை ஏற்று, ஒருங்கிணைந்த சேவை மையப்பணியாளர்கள் காவல்துறையின் உதவியுடன், சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கு அந்த மூதாட்டி இல்லை ; அவர்களுக்கு அதிர்ச்சி. வாட்ஸ்- அப்பில் வந்த செய்தி வழக்கம்போல் பொய்யா என அவர்கள் பேசத் தொடங்கினர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோதுதான், அந்த மூதாட்டி அங்கு இருந்தது உண்மை என்பது, பின்னர் அவரே எழுந்து எங்கோ சென்றதும் தெரியவந்தது.
உடனடியாக தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது, காந்திகிராமத்தில் இருந்து புலியூர் செல்லும் சாலையில் அந்த மூதாட்டி நடந்து செல்வதைப் பார்த்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் தேடுதல் குழுவினர் அவரை மீட்டு விசாரித்தபோது தனது பெயர் தனபாக்கியம், மகள் அனிதா என்றும் சொல்லி, தனது சொந்த ஊர் வெங்கமேடு என்று கூறியுள்ளார். உடனடியாக குழுவினர் அவரை மீட்டு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வெங்கமேடு பகுதிக்கு சென்று வீடு வீடாக மூதாட்டியின் புகைப்படத்தை காட்டியும் மகள் மற்றும் பேத்தி பெயரை சொல்லியும் விசாரித்தனர். ஆனால் யாரும் தங்களுக்கு தெரியவில்லை என்று கூறிவிட்டனர். அந்த மூதாட்டிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரால் தெளிவான பதிலை கூறமுடியவில்லை தொடர்ந்து என்னை விட்டுவிடுங்கள் நான் என்னுடைய மகள் வீட்டிற்கு சென்று விடுகிறேன் என்று மட்டும் கூறிக் கொண்டே இருந்துள்ளார்.
எனவே, அந்த மூதாட்டியை மீட்டு அன்புக்கரங்கள் இல்லத்தில் இளைப்பாறுதல் செய்து சாப்பிட உணவுக்கொடுத்துவிட்டு மருத்துவ சிகிச்சைக்காகவும், கொரோனா பரிசோதனைக்காகவும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, அவர் ஒருங்கிணைந்த சேவை மையம் பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றார். இவரைப்பற்றிய தகவல் அறிந்தவர்கள் மாவட்ட சமூக நலத்துறை அலுவரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
மூதாட்டியை மீட்டு பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதித்த ஒருங்கிணைந்த சேவை மையம் பணியாளர்கள் இளவரசி, கண்மணி, ரம்யா, மற்றும் காவல் துறை காவலர் கீதா ஆகியரை மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டி வாழ்த்துககளை தெரிவித்தார்.
வாட்ஸ்அப்பில் வந்த தகவலை புறந்தள்ளிவிடமால், அது குறித்து உடனடியாக விசாரித்து, அந்த மூதாட்டியை மீட்க நடவடிக்கை எடுத்த ஆட்சியர் பிரபு சங்கருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.