கவர்னரின் கருத்து குறித்து காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவது ஆளும் அரசுக்கு வழக்கமாகிவிட்டது - ஜி.கே.வாசன்
தமிழகத்தில் கவர்னரின் கருத்து மீது காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவது ஆளும் அரசுக்கு வழக்கமாகிவிட்டது என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு.
பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட தலைவர் இன்டர்நெட் என்.ரவி, தெற்கு மாவட்ட தலைவர் குணா, வடக்கு மாவட்ட தலைவர் கே.வி.ஜி.ரவீந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், மதிவாணன், பொருளாளர் கே.டி.தனபால், ராஜீவ், திருச்சி மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் எஸ்.செல்வம், அன்னபூரணி உள்ளிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள். பின்பு செய்தியார்களை சந்தித்த த.மா.கா தலைவர் ஜி. கே.வாசன் பேசியது, “தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தாரிடையே தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். நன்றாக இருப்பதாகவும், விரைவில் பணிக்கு திரும்புவார்” என்றும் தெரிவித்தனர்.
அமைச்சர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று கனிவோடு செயல்பட வேண்டும். கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதை துரிதப்படுத்த வேண்டும்.
மேலும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக உரங்களை வழங்க வேண்டும். இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். பொதுப்பணித்துறை அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களையும் தூர்வார வேண்டும். சன்மார்க்க சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர் ஊரன் அடிகளார் மறைவுக்கு தமிழுக்கும், ஆன்மீகத்துக்கும் பெரிய இழப்பு என்றார். இதனை தொடர்ந்து பேசிய அவர் ”ஜி.எஸ்.டி. வரி ஏற்ற, இறக்கம் என்பது நிரந்தரமல்ல. நிதித்துறையை பொறுத்தவரையில் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதில் மாநில நிதி அமைச்சர்களும் கலந்து கொண்டு சாதக பாதகங்களை தெரிந்து கொண்டு முடிவு எடுக்கிறார்கள். மக்களை பாதிக்கின்ற முடிவென்றால் அதனை மறுபரிசனை செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது. திராவிடம் என்பது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சொல் என்ற ஆளுநரின் பேச்சை பற்றிய கேள்விக்கு, கவர்னரின் கருத்து மீது காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவது ஆளும் அரசுக்கு வழக்கமாகிவிட்டது. அ.தி.மு.க.வில் நடப்பது உட்க்கட்சி விவகாரம். இருப்பினும் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்” என்றார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்