திருச்சியில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு - தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு
’’ஒரு நாளைக்கு 2,000 முதல் 6,000 வரை சோதனையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் திட்டம்’’
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு நாட்களாக மூன்று இலக்கத்தைத் தாண்டியதால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு ஒரு நாளைக்கு 1,000 முதல் 2,000 மாதிரிகள் வரை RT-PCR சோதனையை அதிகரித்துள்ளது. மேலும் பரிசோதனையை தீவிரப்படுத்த ஒரு பிரத்யேகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் புதிய நோய்த்தொற்றுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருச்சி மாநகராட்சி, நகரில் பகுதிகளில் தொற்று விகிதம் இன்னும் கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிகின்றனர். மேலும் ஒரு நாளைக்கு 2,000 முதல் 6,000 வரை சோதனையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில், நகரம் அதன் தற்போதைய சோதனை அளவை இரட்டிப்பாக்கும் என்றனர்.
மேலும் பிரத்யேக குழு அமைக்கபட்டு தடுப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரபடுத்தி உள்ளது. மேலும் தடுப்பூசி போடப்பட்டு மற்றும் அறிகுறியற்ற தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களது வீட்டிலியே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் நிலையை கருத்தில் கொண்டு தகுதியானவர்களை வீட்டில் தனிமைப்படுத்த அனுமதிக்கிறோம். சோதனை செய்த தடுப்பூசி போடப்பட்டவர்கள் பெரும்பாலும் அறிகுறியற்றவர்கள், என்று நகர சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் திருச்சி மாநகராட்சி, கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க மொபைல் குழுவை நியமிக்கவும், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய மொபைல் ஹெல்ப்லைனைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. யாத்ரி நிவாஸ், பாரதிதாசன் பல்கலைக்கழகம் (கஜாமலை) மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரியில் மூன்று கோவிட் பராமரிப்பு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.
திருச்சி மாவட்டத்தில் தகுதியான மக்கள் தொகையில் சுமார் 82 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 64 சதவீதம் பேர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மூன்றாவது அலை தீவிரமடைவதற்கு முன், தடுப்பூசி செலுத்த தகுதியான மக்கள் தொகையில் 90 சதவீதமாக அதிகரிக்க மாவட்ட சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் வணிக வீதிகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. கண்காட்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகரில் பல இடங்களில் துணி விற்பனை கண்காட்சி நடப்பதாக, பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு கூறிய விதிமுறை முழுமையாக மக்கள் பின்பற்ற வேண்டும். குறிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், கூட்டம் கூடுவதை தவிற்க வேண்டும், தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட அதிகாரிகள் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.