டெல்டா மாவட்டங்களில் 6.8லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத் துறை இலக்கு
வரும் செப்.12ஆம் தேதி தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 சிறப்பு முகாம்களை அமைத்து 36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை திட்டம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. அதேசமயம் தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக கடந்த 4ஆம் தேதி 6 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தபட்டது. தமிழகத்தில் தற்போது வரை 3 கோடியே 37 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் சுகாதாரத்துறை பணியாளர்கள் 8.83 லட்சம் பேர், முன்களப் பணியாளர்கள 11.83 லட்சம் பேர், 18-44 வயது உள்ளவர்கள் 1.60 கோடி பேர், 45-60 வயது உள்ளவர்கள் 1.06 கோடி பேர், 60 வயதுக்கு மேல் 49.93 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் வரும் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம்களை நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. அன்றைய தினம் 43 ஆயிரத்து 51 சிறப்பு முகாம்கள் மூலம் 36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் 619 முகாம்களில் 34,785 பேருக்கும், அரியலூர் (மாவட்டம் வாரியாக) 493 முகாம்களில் 39,406 பேருக்கும், கரூரில் 706 முகாமிகளில் 52,033 பேருக்கும், மயிலாடுதுறையில் 400 முகாம்களில் 51,242 பேருக்கும், நாகையில் 564 முகாம்களில் 30,833 பேருக்கும், பெரம்பலூரில் 356 முகாம்களில் 27,593 பேருக்கும், புதுக்கோட்டையில் 653 முகாம்களில் 43,190 பேருக்கும், தஞ்சையில் 1,550 முகாம்களில் 1,28,564 பேருக்கும், திருச்சியில் 1470 முகாம்களில் 1,37,593 பேருக்கும், திருவாரூரில் 816 முகாம்களில் 63,217 பேருக்கும் என டெல்டா மாவட்டங்களில் 6 லட்சத்து 8 ஆயிரத்து 456 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெரும் தொற்று பரவுவதை தடுக்க மாநில அரசு பல கட்டுபாடுகளை விதித்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சில மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு கொரோனா தொற்றை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மத்திய மண்டலத்தை பொருத்தவரை திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், போன்ற பகுதிகளில் தொற்றின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது, குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முழுமையாக கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசங்கள் அணிய வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சில மாவட்டங்களில் மக்கள் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாமல் இயல்பாக செயல்படுவதே அதிகரிக்க காரணம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், இதனால் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி மக்கள் அதிகமாக கூடும் இடங்களை கண்காணித்து அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், முகக் கவசங்கள் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கவேண்டும், விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளது, அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் சிறப்பு மருத்துவ முகாம் அமைப்பது தொடர்பாக தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மாவட்ட வாரியாக சிறப்பு முகாம் அமைத்தல், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், வருவாய் மற்றும் உள்ளாட்சி துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோரை இப்பணியில் ஈடுபடுத்துதல் உள்ளிட்டவைகள் தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் உள்ளது. இம்முகாம் காலை 7 முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )