ஜனநாயகம் என்கிற பெயரில் ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறையை ஆளுநர் செய்து வருகிறார் - முத்தரசன்
ஆளுநர் தொடர்ந்து இது போல் பேசுவதும் செயல்படுவதும் அராஜகம். ஜனநாயகம் என்கிற பெயரால் ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறைகளை ஆளுநர் செய்து வருகிறார் .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாஜக அரசை அகற்ற வேண்டும் என்கிற மையக்கருத்தில் மாற்றத்தை நோக்கி என்கிற நடைபயண இயக்கம் இன்று தொடங்கப்பட்டது. திருச்சி உறையூரில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு கலந்துகொண்டு அந்த நடைபயண பிரச்சார இயக்கத்தை தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறியது.. பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. எங்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் வகையில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கத்தை தொடங்கியுள்ளார்கள். இங்கு தொடங்கிய பிரச்சாரம் நிச்சயம் வெற்றி பெறும். இந்த பிரச்சார இயக்கத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும். என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பிரச்சார இயக்கத்தை முன்னிட்டு மாற்றத்தை நோக்கி என்கிற தலைப்பில் அச்சிடப்பட்ட பிரசுரத்தை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட அதனை முத்தரசன் பெற்று கொண்டார். தொடர்ந்து இன்று காரல் மார்க்ஸின் 205ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அங்கு இருந்த அவருடைய உருவப்படத்திற்கு அமைச்சர் கே என் நேரு, முத்தரசன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன் கூறியது..
பா.ஜ.க ஆட்சி ஜனநாயகத்தின் மீது கடுகளவும் நம்பிக்கையற்று, சர்வாதிகாரத்தின் மீதும் பாசிசத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட ஆட்சியாக அது இருக்கிறது. அதனால் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களுக்கு எதிரான திட்டங்களை தான் செய்து வருகிறார்கள். எனவே பா.ஜ.க வின் உண்மை முகத்தை மக்களுக்கு எடுத்து காட்டும் வகையில் மாற்றத்தை நோக்கி என்கிற நடைபயண இயக்கத்தை இன்று தொடங்கி இருக்கிறோம். இன்று தொடங்கப்பட்ட இந்த பிரச்சார இயக்கம் மே 10 வரை நடைபெறுகிறது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து வீடுகளுக்கும் சென்று பா.ஜ.க குறித்தும் மோடி குறித்தும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தவறானது என எடுத்து கூற இருக்கிறோம். இதற்காக மாற்றத்தை நோக்கி என்கிற பிரசுரத்தை 10 லட்சம் பிரதிகள் அச்சிட்டு அதை மக்களிடையே விநியோகம் செய்ய இருக்கிறோம். ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிருக்கும் பொறுப்பு மிக மதிக்கத்தக்க கண்ணியமான பொறுப்பு. அந்த கண்ணியத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் பொறுப்பேற்றது முதல் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக நேற்று அளித்த பேட்டியில் சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆளுநர் உரையில் இருந்தது அனைத்தும் தவறு என கூறி உள்ளார். அந்த உரை என்பது அரசின் சார்பில் தரப்படுவது, அந்த உரை ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அவர் ஒப்புதல் அளித்த பின்னர் தான் அச்சிடப்படும். அந்த உரையின் மீது கருத்து கூற கூடியவர் ஆளுநர் அல்ல, அது சட்ட பேரவை உறுப்பினர்களின் உரிமை அப்படியிருக்கையில் அந்த உரையில் இருந்த அனைத்தும் தவறு என அவர் கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.
ஆளுநராக பொறுப்பேற்பவர் உறுதிமொழி ஏற்று தான் பொறுப்பேற்கிறார் அந்த உறுதிமொழிக்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி பேசிக் கொண்டிருக்கிறார். அரசியலமைப்பு சட்டத்திற்கு நேர் மாறாக பேசிக் கொண்டிருக்கிறார். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என் ரவியை டிஸ்மிஸ் செய்து அவரை ஒன்றிய அரசு கைது செய்திருக்க வேண்டும் ஆனால் ஒன்றிய அரசு யோக்கியமற்ற அரசாக இருப்பதால் அதனை அவர்கள் செய்ய மறுக்கிறார்கள். அதை அவர்கள் செய்ய மறுப்பதால் தன் இஷ்டத்திற்கு ஆளுநர் பேசி வருகிறார்.அதேபோல சனாதனம், தான் ஏற்ற கொள்கை என கூறுகிறார் அது அவருடைய கொள்கையாக இருக்கலாம். ஆனால் அதனை அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் தொண்டனாக பாஜக தொண்டனாக அதனை பரப்ப வேண்டும். ஆளுநர் மாளிகையை கமலாலயமாக பயன்படுத்த அவருக்கு அனுமதி கிடையாது. அவர் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேறி கமலாயத்திற்கு சென்று அவர் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். ஆளுநர் தொடர்ந்து இது போல் பேசுவதும் செயல்படுவதும் அராஜகம். ஜனநாயகம் என்கிற பெயரால் ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறைகளை ஆளுநர் செய்து வருகிறார் . இவர் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் சார்பில் ஆளுநர் குறித்து புகார் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.
மேலும் அது குறித்து விசாரணை செய்தார்களா என தெரியவில்லை, அவர்கள் விசாரணை செய்யாத காரணத்தால் தொடர்ந்து இது போல் அவர் பேசி வருகிறார். குறிப்பாக ஒன்றிய அரசு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்கிற காரணத்தால் அவர் திமிராக பேசிக் கொண்டிருக்கிறார் இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஒரு மசோதாவை நிறைவேற்றிய பிறகு எந்த அரசும் அதை உடனடியாக திரும்பப் பெறாது. ஆனால் தொழிலாளர் வேலை நேர சட்டத்தை நிறைவேற்றி அதை உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றிருப்பது சிறந்த ஜனநாயக அரசாக இது நடைபெறுவதை காட்டுகிறது. கேரளா ஸ்டோரி திரைப்படத்தை மதரீதியாக மட்டும் திசை திருப்பி விட முயற்சிக்கக் கூடாது. அந்த படத்தில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அபத்தமானது, மக்களிடையே மோதலை ஏற்படுத்தக்கூடியது. அதனால் தான் அந்த திரைப்படத்தை வெளியிடக் கூடாது என கூறுகிறோம். ஒரு சிலர் மக்களிடையே மோதலை ஏற்படுத்த வேண்டும் என செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், நாங்கள் அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம் என தெரிவித்தார்.