(Source: ECI/ABP News/ABP Majha)
திருச்சி அருகே அரசு பேருந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 65 பயணிகள்
திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குணசீலம் அருகே அரசு பேருந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் 65 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சியில் இருந்து சேலம் எடப்பாடியை நோக்கி 65 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பேருந்தை சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, மயிலம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (வயது 44) என்பவர் ஓட்டிச் சென்றார். திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குணசீலம் அருகே பேருந்து வந்தபோது எதிரே சென்ற லாரி மீது மோதாமல் இருக்க டிரைவர் பேருந்தை திருப்ப முயன்றார்.
பள்ளத்தில் சாய்ந்த பேருந்து:
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் பக்கவாட்டு சக்கரங்கள் மண்ணில் பதிந்து, பேருந்து சாய்ந்தபடி நின்றது. இதனால் பயணிகள் உயிர் பயத்தில் சத்தம்போட்டனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை படிப்படியாக பேருந்தில் இருந்து இறக்கி மீட்டு, சேலம் செல்லும் மற்றொரு அரசு பேருந்தில் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து கிரேன் எந்திரத்தின் உதவியுடன் பேருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பெங்களூருவில் இருந்து வந்த அரசு சொகுசு பேருந்து நேற்று அதிகாலை விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அன்று மாலை மீண்டும் ஒரு அரசு பேருந்து பள்ளத்தில் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடிக்கடி விபத்துக்கள்:
இந்தப் பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி இந்த பகுதியில் விபத்துக்களால் உயிரிழந்த சம்பவம் அரங்கே அரங்கேறி உள்ளது. பலமுறை பொதுமக்கள் தரப்பில் சாலைகளை சீரமைக்கவும், மின்விளக்குகளை பொருத்த வேண்டும் எனவும் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.
ஆகையால் இனி வரும் நாட்களில் விபத்துக்கள் நடக்காத வண்ணம் திருச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையை மீண்டும் சீரமைக்க வேண்டும். மேலும் சாலைகளை அகலப்படுத்த வேண்டும், குறிப்பாக வளைவுகள் இருக்கும் இடத்தில் அறிவிப்பு பலகை பொருத்த வேண்டும், இரவு நேரங்களில் மின் விளக்குகள் பொருந்திய அறிவிப்பு பலகையும் ,சாலை முழுவதுமாக விளக்குகளை அமைத்து வாகன ஓட்டிகளுக்கு ஒரு பாதுகாப்பை அளிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரே நாளில் இரண்டு அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்