தேர்தல் பத்திரம் விவகாரம்: பாஜக அரசு, எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும், ஊழல் செய்த பாஜகவினர் அனைவரும் சிறைக்கு செல்வார்கள்.
பா.ஜ.க அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்குப் பிடித்த அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம். மேலும் தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் ரூ.1000 முதல் ரூ. 1 கோடி வரை விற்பனை செய்யப்பட்டது. அதேநேரம் தேர்தல் பத்திரங்களை வாங்குபவர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. இந்த பத்திரத்தை 15 நாட்களுக்குள் பணமாக மாற்ற வேண்டும். இல்லை என்றால் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதிக்குச் சென்றுவிடும். இப்படியான சிக்கலும் இந்த தேர்தல் பத்திரத்திலிருந்தது இந்த தேர்தல் பத்திரம் முழுக்க முழுக்க பா.ஜ.க கட்சிக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது. 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் பா.ஜ.க. மட்டும் ரூ.5,272 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது மொத்த நிதியில் 58 சதவிகிதம் ஆகும். இதன் காரணமாக தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை, எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.
மேலும், 2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் அளிக்க வேண்டும் என்றும் நன்கொடை கொடுத்தோர் விவரங்களைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் மார்ச் 13 ஆம் தேதிக்குள் வெளியிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே 2 நாட்களுக்கு முன்னர் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட எஸ்.பி.ஐ வங்கி ஜூன் மாதம் வரையில் அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் இந்த விவரங்களை வெளியிடுவதில் இருந்து தவிர்க்கவே எஸ்.பி.ஐ இது போன்ற கோரிக்கையை எழுப்பியுள்ளதாக இந்த சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில உள்ள SBI வங்கி முன்பு திருச்சி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு மற்றும் எஸ்பிஐ வங்கியை கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டது. மேலும் மத்திய அரசு தொடர்ந்து பொதுமக்களை வஞ்சிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. மக்களுக்கான எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை, அதேசமயம் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை, அனைத்திலும் ஊழல் மட்டுமே பாஜக அரசு செய்து வருவதாக குற்றம் சாட்டினர். உச்சநீதிமன்ற தீர்பபின்படி, தேர்தல் பத்திர விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும். வருகின்ற தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும், இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். குறிப்பாக மக்களுக்கான அரசாங்கமாக காங்கிரஸ் இருக்கும் என தெரிவித்தனர். பாஜக அரசை ஆட்சி பொறுப்பிலிருந்து மக்கள் விரட்டுவார்கள். இந்த தேர்தல் தான் அவர்களுக்கு இறுதி தேர்தலாக இருக்கும், ஜனநாயகம் வெல்லும் சர்வாதிகார போக்கு விரட்டி அடிக்கப்படும் என கோஷங்கள் எழுப்பினர்.