அதிமுக ஊழல்களை வெளிக்கொண்டு வருவதில் திமுக அரசு தயக்கம் காட்டுகிறது - கே. பாலகிருஷ்ணன்
அ.தி.மு.க. ஊழல்களை வெளிக்கொண்டு வருவதில் தி.மு.க. அரசு தயக்கம் காட்டி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்..
அரியலூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் கனிம வள கொள்ளை நடைபெற்று வருகிறது. அதனை கட்டுப்படுத்தாமல் மாவட்ட ஆட்சியர் நீர்நிலை புறம்போக்கு என்ற பெயரில் ஏழை, எளிய மக்களின் குடிசைகளை அகற்றி வருகிறார். இதனால் பல மக்கள் பாதிக்கபட்டு வாழ்வாதாரம் இழந்து வருகிறார்கள். மேலும் தமிழக அரசு அனைத்து துறைகளிலும் ஒப்பந்தம் அடிப்படையில் ஊழியர்களை நிரப்பி வருகிறது. அவ்வாறு நிரப்பாமல் நிரந்தர பணி வழங்கிட வேண்டும். மேலும் கொள்ளிடம் ஆற்றில் குர்வாடி தலைப்பில் கதவுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும். மேலும் முந்திரிக்கொட்டை பயிருக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்தபடி மாட்டு வண்டிகளுக்கு மணல் குவாரி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் நகரில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் வாலண்டினா சின்னதுரை எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.5 லட்சத்து 17 ஆயிரத்து 100 வழங்கப்பட்டது.
முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது, கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையேற்றம் மூலம் மத்திய அரசு சாமானிய மக்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதேநிலை நீடித்தால் வரும் காலங்களில் இலங்கை போன்ற நிலை இந்தியாவிலும் வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. ஆகையால் மத்திய அரசு உரிய நடவடிக்கையை உடனே எடுக்கவேண்டும் என்றார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், அ.தி.மு.க. ஊழல்களை வெளிக்கொண்டு வருவதில் தி.மு.க. அரசு தயக்கம் காட்டி வருகிறது என தெரிவித்தார். மேலும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவது உள்ளிட்ட வாக்குறுதிகளை தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியின் படி நிறைவேற்ற வேண்டும். தமிழக கவர்னர் போட்டி சர்க்கார் நடத்தி வருகிறார். இதுபோல் மீண்டும் நடந்தால் கவர்னரை வெளியேற்றக்கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்