சாக்கடையை தூர்வாரிக்கொண்டிருந்த துப்புரவு பணியாளர்களிடம் நேரில் சந்தித்து நன்றி சொன்ன ஆட்சியர்
’’தினந்தோறும் கழிவுகளை அகற்றி முறையாக அப்புறப்படுத்தும் தங்களது தன்னலம் கருதாத பணி மிகவும் போற்றத்தக்கது என பாராட்டு’’
வடகிழக்குப் பருவமழை காலத்தில் நீர்வழித்தடங்கள், கழிவுநீர் வாய்க்கால்கள், மழைநீர்வடிகால்கள் ஆகியவற்றை முழுமையாக தூர்வார வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு வார காலத்திற்குள் அனைத்து வடிகால் வாய்க்கால்கள் மற்றும் நீர்வழித்தடங்களை தூர்வார கரூர் மாவட்டத்தில் நகராட்சிப்பகுதிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வார திட்டமிடப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கடைவீதி தெரு, மேலக்காரத்தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், மருதூர் பேரூராட்சி அக்ஹாரம் தெரு, குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் பார்வையிட்டார். தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறைகள், கால் உறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, கிருஷ்ணராயபுரம் கடைவீதியில் கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி கழிவுகளை தூர்வாரி கொண்டிருந்த தூய்மை பணியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், பொதுமக்கள் அனைவரும் சுகாதாரமாக வாழ உங்களின் அர்ப்பணிப்பு மிக்க பணி மிகவும் இன்றியமையாதது. தினந்தோறும் கழிவுகளை அகற்றி முறையாக அப்புறப்படுத்தும் தங்களது தன்னலம் கருதாத பணி மிகவும் போற்றத்தக்கது உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் என்று கூறி இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார். இதைக்கேட்ட அனைத்து தூய்மை பணியாளர்களும் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்வழித்தடங்கள், மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் 19.09.2021 அன்று அமராவதி ஆற்றின் இடதுகரை வாய்க்கால் தூர்வாரும் பணிகளை பார்வைியிட்டு துவக்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்வழித்தடங்களை தூர்வாருதல், நெடுஞ்சாலைத்துறையின் கட்டுபாட்டில் உள்ள பாலங்களின் அடியில் மழைநீர் தேங்கி நிற்காமல் வழிந்தோடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.
மேலும், தூர்வாரப்படும் இடத்தின் தன்மைக்கு ஏற்ப பொக்லைன் இயந்திரங்கள் மூலமாகவும், பணியாளர்களைக் கொண்டும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. தூர்வாரும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என்று சம்மந்தபட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கழிவுநீர் வாய்க்கால்களில் தூர்வாரி எடுக்கப்பட்ட கழிவுகளை அருகில் உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்துச்சென்று அப்புறப்படுத்த வேண்டும் என்றும், தூர்வாரிய பிறகு கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இப்பணிகளை ஒரு வார காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் அனைத்து துறை அலுவலர்களும், பணியாளர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றார்கள். கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தூய்மைப்பணியாளர்களுக்கும்
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.