ஜீப் டிரைவரை வசைபாடிய காவல் உதவி ஆணையர்.. வைரலாகும் வீடியோ.. நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?
பகல் பணி செய்துவிட்டு இரவு பணியில் ஈடுபட்ட வாகன ஓட்டுனர் தூங்கியதை வீடியோ எடுத்து அவரை மிரட்டி, தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார் என்று தெரிவித்தனர்.

தஞ்சாவூர்: பகல் டியூட்டி முடித்து இரவு டியூட்டியும் சேர்த்து பார்த்த நிலையில் அசந்து தூங்கிய ஜீப் டிரைவரை கடுமையாக திட்டிய திருச்சி போலீஸ் உதவி ஆணையரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்து காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறை என்பது இதுவரை எட்டா கனியாகத்தான் இருந்து வருகிறது. காவலர்கள் தங்கள் மற்றும் உறவினர்களின் வீட்டு விசேஷங்கள் மற்றும் சொந்த ஊரில் நடக்கும் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு கூட செல்ல முடியாத நிலையில்தான் பணியாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் பணியாற்றும் காவலர்களை சில காவல்துறை உயர்அதிகாரிகள் மரியாதை குறைவாக நடத்துவதாகவும், ஒருமையில் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களால் மன உளைச்சல் ஏற்பட்ட சில காவலர்கள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவமும் தமிழகத்தில் நடந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களால் தொடர்ந்து பணியாற்றும் காவலர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் ஆணையர் ந.காமினி சமீபத்தில் போலீசாருக்கு கட்டாயம் வார விடுமுறை அளிக்க வேண்டும், இதனை தனது அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். இதற்கிடையில் திருச்சி மாநகர காவல்துறை கன்டோன்மென்ட் சரக உதவி ஆணையராக பணியாற்றும் ஜான் கென்னடி என்பவர் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இரவு ரோந்து பணியின்போது தனக்கு கீழ் பணியாற்றும் ஜீப் டிரைவர் ஒருவர் தூங்கியதாக கூறி அவரை நிற்க வைத்து கண்டபடி திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுதந்திர தின நாளில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே தொடர்ந்து பணியாற்றுவதால் ஓய்வின்றி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வரும் காவலர்களுக்கு இது அதிர்ச்சி சம்பவமாக மாறியுள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல மேலதிகாரி ஒருவர் தனக்கு கீழ் பணியாற்றும் காவலர் ஒருவரை வசை பாடுவது தமிழ்நாடு முழுவதும் காவல்துறை வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
காவல்துறையினர் தங்களது குடும்பத்தினர், குழந்தைகளை மறந்து எந்நேரமும் காவல் பணி செய்வதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இது போதாது என்று இதுபோன்று மேல் அதிகாரிகள் கடுமையான வார்த்தைகளால் வசை பாடுவத அவர்களை மேலும் மன உளைச்சலுக்கு தள்ளி உள்ளது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் கூறியதாவது: உதவி ஆணையர் ஜான் கென்னடி மீது இதுபோல பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அவர், காவல் ஆய்வாளராக பணிபுரிந்தார். பின்னர் மதுரை மாவட்டத்தில் உதவி ஆணையராக கட்டுப்பாட்டு அறையில் பணி மேற்கொண்டார். அப்போது தொலைபேசி மூலம் பல ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு தனக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தரவும், வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி தரவும் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
அங்கு அவர் மீது இதேபோல பல குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அங்கிருந்து அவர் திருச்சி மாநகர் குற்றப்பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டார். இங்கும் அவர் தனக்கு கீழ் பணியாற்றும் காவலர்களை தனக்கு தேவையான பொருட்களை வாங்கி வர வற்புறுத்துவது, காவல் நிலையத்திலோ, கட்டுப்பாட்டு அறையிலோ அதிகாலை 3 மணி அளவில் தூங்கும் பெண் போலீசாரை வீடியோ எடுத்து மிரட்டுவது போன்ற செயல்களை செய்து வருகிறார். தற்போது பகல் பணி செய்துவிட்டு இரவு பணியில் ஈடுபட்ட வாகன ஓட்டுனர் தூங்கியதை வீடியோ எடுத்து அவரை மிரட்டி, தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார் என்று தெரிவித்தனர்.
காவல்துறையினருக்கு இதுபோன்று கடும் டார்ச்சர் செய்வதால் அவர்கள் மனநிலை பாதிக்கப்படுவதாகவும், அவர்கள் வேறு முடிவுகளுக்கு தள்ளப்படுவதாகவும் அவர்களுக்கு நல்லதொரு, நியாயமான முடிவை முதல்வர் ஸ்டாலின் மற்றும் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலதிகாரிகளின் இதுபோன்ற செயல்கள் பல காவலர்களை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடக்காதவாறு நடவடிக்கை எடுப்பது முதல்வரின் கையில்தான் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.





















