ஆன்லைன்மூலம் புதிய மோசடி... பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் - காவல்துறை எச்சரிக்கை
விரல்ரேகை நகல் மூலம் ஆன்லைனில் புதிய மோசடி நடப்பதாகவும் பொதுமக்கள் உஷாராக இருக்கவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நேரடி குற்றங்களை விட தற்போது ஆன்லைனில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பு பெற்று தருவதாகவும், செயலியில் பரிசு பொருட்கள் விழுந்திருப்பதாகவும், வங்கியில் இருந்து பேசுவதாகவும், வெளிநாட்டில் இருந்து பரிசு பொருட்கள் வந்திருப்பதாகவும், குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும் என பொதுமக்களிடம் மர்மநபர்கள் செல்போன் எண் மூலம் பேசி, அவர்களது வங்கி கணக்கு எண் விவரம், ரகசிய குறியீடு எண் உள்ளிட்டவற்றை பெற்று அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யும் கிரைம்கள் அதிகமாக நடக்கிறது. மேலும் வங்கி கணக்கு எண் கூறி அதில் பணத்தை அனுப்ப கூறியும் மோசடியில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற மோசடியில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் ஆசை யாரை விட்டது என்பது போல மர்மநபர்களின் பேச்சை நம்பி பணத்தை இழக்கும் நபர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் செல்போனில் செயலி பதிவிறக்கம் செய்யும் போது அதில் கொடுக்கப்படும் தகவல்கள், விரல் ரேகை பதிவு மூலம் அதன் நகலை பயன்படுத்தி அவர்களது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் பணத்தை மோசடி செய்து எடுப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் உஷாராக இருக்க போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் இந்த மோசடி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ``செல்போனில் தங்களது உடலில் ஆக்சிஜன், சா்க்கரை அல்லது ரத்த கொதிப்பு அளவை சரிபார்க்க எந்தவொரு செயலிகளையும் பதிவிறக்கம் செய்யாதீர்கள். ஏனென்றால் உங்கள் விரல்ரேகை நகலை பயன்படுத்தி அந்த ரேகையுடன் இணைத்துள்ள ஆதார் மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து உங்கள் பணத்தை இழக்க வாய்ப்புகள் அதிகம்'' என குறிப்பிட்டுள்ளனர். இந்த விழிப்புணர்வு பதிவு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் கவனித்து உஷாராக இருந்து கொள்ளும்படி போலீசார் தெரிவித்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்