திருச்சி மாவட்டத்தில் 2,185 படுக்கை வசதிகளுடன் 7 இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள்
திருச்சி மாவட்டத்தில் 2,185 படுக்கை வசதிகளுடன் 7 இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுபடுத்த மாநில அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து நடவடிக்கைகளை தீவிரபடுத்தியுள்ளது. மேலும் மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்கவும், அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளையும் தீவிரபடுத்த உத்தரவிடபட்டுள்ளது. இதன்படி திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் 2,185 படுக்கை வசதிகளுடன் 7 கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் காஜா மலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன சிறப்பு சிகிச்சை மையங்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டார். மேலும் மேற்கொள்ளப்பட்டுள்ள படுக்கை வசதிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட இதர வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்திடும் வகையில் 7 இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. அதன்படி திருச்சி காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 200 படுக்கைகள், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் 500 படுக்கைகள், திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியில் 375 படுக்கைகள், துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் 360 படுகைகள், சேதுராப்பட்டி யில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 500 படுக்கைகள், திருச்சி மாவட்ட மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கில் 100 படுக்கைகள் ,புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் 150 படுக்கைகள், என 7 இடங்களில் 2,185 படுக்கைகள் மற்றும் உரிய வசதிகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம், மற்றும் யாத்ரி நிவாஸ் ஆகிய இரு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்குகிறது என்றார்.
கொரோனா பரவலை தடுத்திட திருச்சி மாவட்டத்தில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்தும், கைகளில் கிருமி நாசினி தெளித்து, சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் 18 வயதுக்கு மேற்பட்டோர் முதல் மற்றும் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி சிறார்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியும் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்து கொள்ள வேண்டும். மேலும் சமூக பரவலை தடுத்திடும் வகையில் மக்கள் பாதுக்காப்பாகவும், அரசு கூறிய விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.