சாமி கும்பிட சென்ற சகோதரர்கள் மின்சாரம் பாய்ந்து பலி - திருச்சியில் சோகம்
சில இடங்களில் மின்சாரம் கம்பி சரியாக பொருத்தாமலும், அறுந்த கம்பியை அப்புறப்படுத்தாமலும் அப்படியே போட்டுவிட்டு மின்சார துறை ஊழியர்கள் சென்றுவிடுகிறார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் சாமி கும்பிட சென்றபோது மின்சாரம் பாய்ந்து அண்ணன்- தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அத்தாணி அரிசன தெருவை சேர்ந்தவர் அரவன் (வயது 60). இவரது தம்பி மாரிமுத்து (58). இவர்கள் விவசாயம் செய்து வந்தனர். ஆண்டு தோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வது வழக்கம். இதனை தொடர்ந்து இந்தாண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு தனது குடும்பத்துடன் வயல்வெளி பகுதியான அத்தாணி கிராமத்தில் உள்ள கருப்பு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக அரவன், மாரிமுத்து ஆகியோர் சென்றனர். கோவில் அருகே அவர்கள் நடந்து சென்றபோது அங்குள்ள மின் கம்பத்தின் இணைப்பு கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது. இதை கவனிக்காமல் சென்று அரவனின் கால் கம்பியின் மீது பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் உயிருக்கு போராடினார். மேலும் அவரது அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து, தனது அண்ணனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவரும் தூக்கி வீசப்பட்டார். 2 பேரின் அலறல் சத்தத்தையும் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். மேலும் இதுகுறித்து மண்ணச்சநல்லூர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த மின் ஊழியர்கள் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். மேலும் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து 2 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாமி கும்பிட சென்றபோது மின்சாரம் பாய்ந்து அண்ணன்- தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுபோன்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்சாரம் கம்பிகள் பராமரிப்புகாக பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் சில இடங்களில் மின்சாரம் கம்பி சரியாக பொருத்தாமலும், அறுந்த கம்பியை அப்புறப்படுத்தாமலும் அப்படியே போட்டுவிட்டு மின்சார துறை ஊழியர்கள் சென்றுவிடுகிறார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்