திருச்சி: பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது: போலீஸ் நடவடிக்கை
திருச்சி மாநகர், உறையூர் மீன்மார்க்கெட் அருகில் முன்விரோதம் காரணமாக பெரம்பலூரை சேர்ந்த மீன் வியாபாரியை வெட்டி கொலை செய்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது..
திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக காமணி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக வாரம் தோறும் திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார். மேலும் மாநகர் பகுதிகளில் திருட்டு,கொலை, கொள்ளை சம்பவங்களை முற்றிலும் தடுத்திட 24 மணி நேரமும் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக மாநகர் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும், சந்தேகப்படும்படி நபர்கள் தென்பட்டால் உடனடியாக அழைத்து விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டு உள்ளார். குறிப்பாக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குக்கா, கஞ்சா, புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது மட்டுமல்லாமல் கடைகளை மூடி சீல் வைக்கும் நடவடிக்கைளை எடுத்து வருகிறார். பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக ஆயுதங்களை வைத்து மிரட்டும் நபர்களை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்சி மாநகரில் பொதுமக்களிடையே அச்சத்தையும், வன்முறையை தூண்டு விதமாக நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கி ,பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துபவர்களை உடனடியாக அழைத்து விசாரணை செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்சக மாநகரில் கடந்த 29.10.2023-ந்தேதி அதிகாலை 4.00 மணிக்கு உறையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குழுமணிரோட்டில் உள்ள மீன்மார்க்கெட்டிற்கு காரில் வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மீன் வியாபாரி ராமராஜ் என்பவரை முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், மீன்மார்க்கெட் எதிரே உள்ள கண்ணாடி கடை அருகில் ராமராஜ் என்பவரை அரிவாளால் பின் தலையில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில், உறையூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, மாநகர காவல் ஆணையர் காமினி அவர்களின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில் மேற்கண்ட வழக்கில் தொடர்புடைய எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த ரவுடி பாதுஷா (எ) பல்பு பாட்ஷா மற்றும் 6 எதிரிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், எதிரி பாதுஷா (எ) பல்பு பாட்ஷா என்பவர் மீது உறையூர் காவல் நிலையத்தில் பிரியாணி மாஸ்டரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 1 வழக்கும், நாமக்கல் மாவட்டத்தில் ஒருவரை கும்பலாக சென்று கத்தியை காட்டி மிரட்டியதாக 1 வழக்கும், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தொழில் போட்டி காரணமாக ஒருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக 1 வழக்கும் என பல வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரியவருகிறது.
எனவே, எதிரி பாதுஷா (எ) பல்பு பாட்ஷாவின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு உறையூர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி மாநகரில் இதுபோன்ற கொலை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.