‘என்னை ஏமாற்றி வாங்கிய நகை, பணத்தை திருப்பி கொடு’ - காதலன் வீட்டு முன்பு பெண் தர்ணா போராட்டம்
தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் தன்னிடம் வாங்கிய ரூ.35 லட்சம் பணம் மற்றும் 40 பவுன் நகைகளை திரும்ப வழங்க வேண்டும் என கோரி காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் நகைக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி மணிமொழி (வயது 44). கும்பகோணத்தை சேர்ந்த இவருக்கும், நகைக்கடையில் வேலை பார்க்கும் மணிகண்டன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவதும், வெளியே செல்வதுமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் தனியாக இருக்கும்போது சிலர் பார்த்ததாகவும், அவர்கள் மணிமொழியின் கணவனிடம் தகவல் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்ப்பட்டதாக அருகில் உள்ளவர்கள் கூறினார்கள். இதனால் கணவர் பாண்டியன், மணிமொழியை விவாகரத்து செய்த நிலையில் நஷ்ட ஈடாக மணிமொழிக்கு கொடுத்த பணம், நகை ஆகியவற்றை கள்ளக்காதலன் மணிகண்டனிடம் கொடுத்துள்ளார். இதற்கிடையே மணிகண்டனுக்கு மற்றொரு இடத்தில் திருமணம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இந்த செய்தியை அறிந்த மணிமொழி மணிகண்டன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் தன்னிடம் வாங்கிய ரூ.35 லட்சம் பணம் மற்றும் 40 பவுன் நகைகளை திரும்ப வழங்க வேண்டும் என கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதி கவுன்சிலர் அம்பிகாபதி மற்றும் ஜெயங்கொண்டம் காவல்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பேசி கலந்து ஆலோசித்து நல்ல முடிவை சொல்வதாக கூறியதன் பேரில் மணிமொழி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையே அவர் திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மணிமொழிக்கு தண்ணீர் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் மேல குடியிருப்பு கிராமம் பரபரப்பாக காணப்பட்டது. மணிமொழிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, சிலர் ஆசை வார்த்தைகள் கூறி பெண்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக திருமணமான பிறகும் சிலர் இதுபோன்ற தவறான செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். மற்றவர்களை நம்பி ஏமாந்து தன்னிடம் உள்ள நகை, பணம் அனைத்தையும் பறிகொடுத்த பிறகு அவர் என்னை ஏமாற்றி விட்டார் என தொடர்ந்து இதுபோன்ற புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. மேலும் தேவையற்ற செயல்களில் பெண்கள் ஈடுபட வேண்டாம் . இதனைத் தொடர்ந்து பெண்ணை ஏமாற்றிய அவரை அழைத்து விசாரணை நடத்தி உரிய இழப்பீடு வாங்கி தருவதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்