மேலும் அறிய
செல்போன் டவர் அமைத்து தருவதாக கூறி விவசாயிடம் 24 லட்சம் மோசடி - டெல்லி சென்று 4 பேரை கைது செய்த போலீஸ்
அரியலூர் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தை சேர்ந்த விவசாயியிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த 4 பேரை தனிபடை காவல்துறையினர் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரனுக்கு (52), கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் செல்போன் கோபுரம் அமைக்க இடம் கொடுத்தால் முன்பணமாக 40 லட்சம் மற்றும் மாத வாடகையாக 40 ஆயிரம் தருவதாக, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பிய ராஜேந்திரனை தொடர்பு கொண்ட நபர்கள், செல்போன் கோபுரம் அமைப்பது தொடர்பாக முன்னேற்பாட்டிற்கான தொகை என்று கூறி பலமுறை பணம் பெற்றுள்ளனர். இதன்படி அந்த குறுஞ்செய்தியை நம்பி 29.1.2018 முதல் 9.11.2020 வரை 23 லட்சத்து 98 ஆயிரத்து 900 ரூபாயை தன்னிடம் இருந்து பெற்று அந்த நபர்கள் மோசடி செய்துவிட்டதாக அரியலூர் சைபர் கிரைம் காவல்துறையில் கடந்த 14.5.2021 அன்று ராஜேந்திரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உடனடியாக அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.9 லட்சத்து 33 ஆயிரத்து 745-ஐ முடக்கம் செய்தனர். இதையடுத்து அந்த தொகையில் நீதிமன்றத்தின் மூலம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 292 மீட்கப்பட்டு ராஜேந்திரனிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விரைந்து கைது செய்யுமாறு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆகியோர் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, இணையக்குற்ற பிரிவு (பொறுப்பு) கூடுதல் காவல் சூப்பிரண்டு திருமேனி உத்தரவின்படி, இணையக்குற்ற பிரிவு ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில் உதவி ஆய்வாளர் மணிகண்டன், உள்ளிட்ட ஜாகீர் உசைன், சுரேஷ்பாபு, அரவிந்தசாமி ஆகிய 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் டெல்லியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்பட்டையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட டெல்லி சகர்பூர் இந்திரா நகரில் இருந்த மருதுபாண்டியன் (37), ராஜேஷ் (36), முருகேசன் (40), ராஜ்கிஷன் (42) ஆகிய 4 பேரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த 3 மடிகணினிகள், 42 செல்போன்கள், 18 சிம்கார்டுகள், 7 வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் 19 ஏ.டி.எம். அட்டைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 4 பேரும் டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருவதும், செல்போன் கோபுரம் அமைப்பது, கடன் தருவது, ஏர்போர்ட்டில் வேலை வாங்கி தருவது போன்ற காரணங்களை கூறி மோசடி செய்து இணையக் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரின் வங்கி கணக்குகள், மற்றும் அசையும், அசையா சொத்துக்கள் உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் தமிழகத்தில் வேறு பகுதிகளில் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அவ்வாறு ஏமாற்றம் அடைந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்து வழக்குகளை பதிவு செய்யலாம் என்று மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion