திருச்சி டிஎஸ்பி வீட்டில் 30 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்
திருச்சியில் டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். அதேசமயம் லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசுத் துறையில் உயர்பதவியில் இருப்பவர்கள் மற்றும் அரசியல் கட்சி சேர்ந்தவர்கள் தங்களுடைய வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்திருந்தால், இது தொடர்பான புகார்கள் வரும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு புகார் உண்மை தகவல் என்றால் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 4ஆம் தேதி தொடரப்பட்ட வழக்கில், காவல்துறை துணை கண்காணிப்பாளருடன் தொடர்புடைய இரண்டு இடங்களில் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். திருச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு (2) காவல்துறை துணை கண்காணிப்பாளராக முத்தரசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் 80 லட்சத்து 29 ஆயிரத்து 450 ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துள்ளார். இது தொடர்பான வழக்கில், முத்தரசனுக்கு தொடர்புடைய வீடுகளில், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையிலான 10 போலீசார் நேற்று முந்தினம் சோதனை நடத்தினர். திருச்சி செம்பட்டு பகுதியில் முத்தரசன் வாழ்ந்து வரும் வாடகை வீட்டிலும், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள கல்யாணசுந்தரம் நகரில் அவரது தாயாரது வீட்டிலும் இச்சோதனை நடத்தப்பட்டது. தஞ்சாவூரில் நடத்தப்பட்ட சோதனையில் பணம், நகை மற்றும் சொந்த ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
அதுபோல திருச்சியில் நடத்தப்பட்ட சோதனையில், அவர் பெயரிலும், அவரது மனைவி பெயரிலும், 22 சொத்துக்கள் வாங்கி இருப்பதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அவரது நண்பர்கள் பெயரில் சொத்துக்களை வாங்கியிருப்பதையும் போலீசார் கண்டுபிடித்து, ஆக மொத்தம் 30 சொத்துக்களுக்கான ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்த 10 லாக்கர் சாவிகளையும் கைப்பற்றி, அதில் இருக்கக்கூடிய ஆவணங்கள் மற்றும் நகைகளை மதிப்பிடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.