வேங்கை வயல் வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்படுமா? ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணா பதில்
வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் விசாரணையை தொடங்கினார்.
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அசுத்தம் கலக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையின் போது ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில், ஒரு நபர் ஆணையத்தை நியமித்து, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் இன்று முதல் தனது விசாரணையை தொடங்கினார்.
வேங்கை வயலில் ஆய்வு:
வேங்கைவயலில் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை அவர் பார்வையிட்டு, நடந்த சம்பவத்தை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின் சிறிது தூரத்தில் அப்பகுதி பொதுமக்களுக்கு புதிதாக கட்டப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதில் கலெக்டர் கவிதாராமு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஆய்வுக்கூட்டத்தை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் செய்த்யாளர்களிடம் பேசியது..
இந்த வழக்கில் ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கி உள்ளோம். வட்டார வளர்ச்சி அதிகாரி, சுகாதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் விசாரித்துவிட்டு, முதலில் வழக்குப்பதிவு செய்த வெள்ளனூர் போலீசார், தற்போது இந்த வழக்கை கையாளும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரையும் விசாரித்துள்ளோம். இது முதல் கட்ட விசாரணை தான். அடுத்து இனி தான் தெரியவரும்.
இந்த விசாரணையானது ஐகோர்ட்டு உத்தரவுப்படி மேற்கொள்ளப்படுகிறது. விசாரணை தொடர்பாக சில அறிவுரைகளை ஐகோர்ட்டு வழங்கி உள்ளது. அதன்படி விசாரணை நடத்தி 2 மாத காலத்திற்குள் விசாரித்து ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். குறிப்பிட்ட கால அளவை விட கூடுதலாக காலம் தேவைப்படுமா? என்பது பின்னர் தான் தெரியும். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனியாக விசாரித்து வருகின்றனர். அவர்களது விசாரணையில் என்ன நடக்கிறது என்று வெளியில் சொன்னால் உண்மையான குற்றவாளி தப்பித்து போக வாய்ப்பு உள்ளது. அவர்களது விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. 100 சாட்சிகளுக்கு மேல் விசாரணை நடத்தி உள்ளனர். ஆணையம் சார்பில் பொதுமக்களிடம் நேரடியாக விசாரணை நடத்துவது என்பது குறித்து இனி தான் முடிவு செய்யப்படும் என்றார்.
மேலும் ரத்த மாதிரி பரிசோதனை நடத்துவது தொடர்பாக ஒருவர் ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளாராம். அந்த மனு வருகிற 1-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அதன்பின் அடுத்தக்கட்டமாக தெரியவரும். வேங்கைவயல் போன்ற சம்பவங்கள் இனி வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க என்ன செய்வதென்று பார்க்க வேண்டும். அதனை தடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த விசாரணையானது இங்கேயே முகாமிட்டு தொடர்ந்து நடத்தப்படும். அடுத்து இனி 2 அல்லது 3 வாரத்திற்கு பிறகு வருவேன். இது போன்ற சம்பவத்தில் சாதாரண மனிதர்கள் ஈடுபட மாட்டார்கள். இந்த சம்பவத்தை ஏன் செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்? என விசாரணை சென்று கொண்டிருக்கிறோம். சம்பவம் நடந்த இடத்தில் நகரப்பகுதியை போன்று கண்காணிப்பு கேமரா வசதி கிடையாது.
அறிவியல் ரீதியான தடயங்கள்:
மேலும் செல்போன் டவர் வசதி இல்லை. இதனால் இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய அறிவியல் ரீதியாக தடயங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். புதிய குடிநீர் தொட்டி கட்டியுள்ளனர். இந்த வழக்கில் ரத்த மாதிரி பரிசோதனை நடத்த 8 பேர் ஒத்துழைக்காத நிலையில் கோர்ட்டு தான் இனி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 சதவீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமான இழப்பீடானது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்பு தான் வழங்கப்படும். ஆணையத்தின் விசாரணைக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படுமா? என்பதை தற்போது தெரிவிக்க இயலாது என தெரிவித்தார்.