சிஎஸ்ஆர் நிதியை கொண்டு தடுப்பூசிகள் வாங்கியதில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம்...!
சிஎஸ்ஆர் நிதி மூலம் தடுப்பூசி போடும் திட்டத்தில் கரூரில் 1.50 கோடி செலவில் 25 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிஎஸ்ஆர் நிதி மூலம் தடுப்பூசி போடும் திட்டத்தில் கரூரில் 1.50 கோடி செலவில் 25 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதைப்போன்று திருச்சி மாவட்டத்தில் 4 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 2 கோடியே 94 லட்சத்து 17 ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் சுகாதாரத்துறை பணியாளர்கள் 8.81 லட்சம் பேர். முன்கள பணியாளர்கள் 1.17 கோடி பேர். 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 1.33 கோடி பேர். 45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 93.67 லட்சம் பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 46.17 லட்சம் பேர். தமிழகத்தில் தினசரி லட்சக்கணக்கானவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பெரு நிறுவன சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியின் மூலம் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்தியாவில் முதல் முறையாக சிஎஸ்ஆர் நிதி மூலம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு அளிக்கும் திட்டம் தமிழகத்தில்தான் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை 8.92 கோடி செலவில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 669 தடுப்பூசிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2.73 கோடி செலவில் 43 ஆயிரம் தடுப்பூசிகள் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சென்னையில் 1.83 கோடி செலவில் 29,127 தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக கரூர் மாவட்டத்தில் 1.57 கோடி செலவில் 25 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது. நான்காவதாக தருமபுரி மாவட்டத்தில் 66 லட்சம் செலவில் 10 ஆயிரத்து 625 தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது. ஐந்தாவதாக கோவையில் 64 லட்சம் செலவில் 10 ஆயிரம் தடுப்பூசிகளும், ஆறாவதாக திருச்சி மாவட்டத்தில் 28 லட்சம் செலவில் 4444 தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது. இதை தவிர்த்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 லட்சம் செலவில் 1746 தடுப்பூசிகளும், திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் செலவில் 159 தடுப்பூசிகளும் செலுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் இரண்டாவது அலையின் தொடக்கத்தில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் தற்போது தோற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு தீவிரமாக செலுத்தப்பட்டு வருவது ஒரு முக்கிய காரணமாகும். மேலும் கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, ஊரடங்கை நீடித்துள்ளது. ஆகையால் பொதுமக்கள் அரசு கூறிய விதி முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும், முகக் கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, தடுப்பூசியை தவறாமல் செலுத்தி கொள்வது, உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் அரசு ஏற்படுத்தி வருகிறது. கொரோனா மூன்றாவது அலையில் மக்கள் பாதிக்கபடமால் இருக்க வேண்டும் என்றால் தடுப்பூசியை அனைவரும் கட்டாயமாக செலுத்திக்கொள்ள வேண்டும், மேலும் மாநில அரசு கூறிய விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.