திருச்சியில் ராணுவ வீரரின் மனைவியிடம் திருடப்பட்ட 24 பவுன் நகைகள் மீட்பு
திருச்சியில் ராணுவவீரரின் மனைவியிடம் திருடப்பட்ட 24 பவுன் நகைகள் மீட்பு, மேலும் அவரிடம் நகைகளை திருடியவா் கைது செய்யப்பட்டார். 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெரம்பலூர் அம்மன் நகரை சேர்ந்தவர் வேணுகோபால். ராணுவவீரர். இவரது மனைவி அருள்சுந்தரி. பள்ளி ஆசிரியை. இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி திருச்சி மெயின்கார்டு கேட் பகுதிக்கு பொருட்கள் வாங்க வந்தனர். அப்போது, வீட்டில் நகைகள் இருந்தால் திருட்டு போய்விடும் என்று எண்ணிய அந்த தம்பதி 27 பவுன் நகைகளை தங்களது கைப்பையில் போட்டு கடைவீதிக்கு எடுத்து வந்தனர். இவர்கள் அடிக்கடி கைப்பையை சோதனை செய்து மிகவும் உஷாராக இருப்பதை பார்த்த ஒரு கும்பல், இவர்கள் ஏதோ விலை உயர்ந்த பொருட்களை வைத்துள்ளார்கள் என்று நோட்டமிட்டு, அவர்களின் கவனத்தை திசைதிருப்பி அருள்சுந்தரியின் கைப்பையில் இருந்த 27 பவுன் நகை இருந்த சிறிய பையை திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ராணுவவீரரின் மனைவியிடம் நகையை திருடியது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ரவி (வயது 42) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 24 பவுன் நகைகளை மீட்டனர். மேலும், ரவியின் மனைவி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்தநிலையில், மீட்கப்பட்ட நகைகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாநகர போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து போலீஸ்கமிஷனர் சத்தியபிரியா ராணுவவீரர் மற்றும் அவருடைய மனைவி அருள்சுந்தரியிடம் மீட்கப்பட்ட 24 பவுன் நகைகளை ஒப்படைத்தார். அத்துடன் இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு ரொக்கப்பரிசு வழங்கினார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா செய்தியாளர்களிடம் பேசியது.. இந்த தம்பதியிடம் நகைகளை திருடிய கும்பல், இதே பாணியில் பலரிடம் நகைகள், செல்போன்கள், மடிக்கணினி ஆகியவற்றை திருடிவந்துள்ளது தெரியவந்தது. தற்போது அந்த கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளியை மட்டும் கைது செய்துள்ளோம். மேலும் 3 பேரை தேடி வருகிறோம். திருச்சி மாநகரில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 43 திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 35 சம்பவங்களில் உரிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு களவு போன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது என்றார்.
திருச்சி மாநகரில் பொருத்தப்பட்டுள்ள 1,600 கண்காணிப்பு கேமராக்களில் பழுதாகியுள்ள கேமராக்கள் படிப்படியாக பழுதுநீக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநகரில் அதிக குற்றச்சம்பவங்கள் நடக்கும் இடங்கள், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் இடங்கள், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய இடங்களில் புதிதாக 1,600 கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் எப்.ஆர்.எஸ் மென்பொருள் மூலம் திருச்சி மாநகரில் சந்தேக நபர்களை ஆய்வு செய்ததில் 2 ஆயிரம் பழைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர போலீஸ் எல்லை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒப்புதல் வந்ததும் விரிவாக்கம் செய்யப்படும். திருநங்கைகள் பாலியல் ரீதியான தொழிலில் ஈடுபடுவதை தடுக்க, அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வதை தடுக்க கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதேபோல மாநகர பகுதியில் குற்றச்சம்பவங்களை குறைக்க 200 குடியிருப்போர் சங்கங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.