அரியலூரில் 2 பெண் காவலர்கள் தற்கொலை முயற்சி - பணி சுமையா? அதிகாரிகள் தொந்தராவா? போலீஸ் விசாரணை
எஸ்.ஐயாக பணியாற்றி வரும் லட்சுமி பிரியா மற்றும் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றும் பிரியங்கா ஆகியோர் தற்கொலை முயற்சி

அரியலுார் காவல்நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் லட்சுமிபிரியா (30). இவருக்கு திருமணமாகி, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவரது கணவரும் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். உயர் அதிகாரியிடம் அனுமதி பெறாமல் லட்சுமி பிரியா மார்ச் 5 முதல் 7 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார். இதனால் திருச்சியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளிக்கு அவரை இடம் மாற்றம் செய்ய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, லட்சமிபிரியா சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அந்த அதிகாரி அவருக்கு 'டார்ச்சர்' கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த லட்சுமிபிரியா 9 ஆம் தேதி காலை பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு பணிக்கு வந்துள்ளார். இந்நிலையில் செந்துறை பிரிவு சாலை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மயங்கி விழுந்தார். உஅடனடியாக சக காவல்துறையினர் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கபட்டது. மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் மருத்துவர்கள் ஆலோசனைபடி அங்கு இருந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து அரியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டனர். தற்கொலைக்கு முக்கிய காரணமாக மன அழுத்தம் தான் என தகவல் தெரியவந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதேபோன்று அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா கூவாகம் பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி பிரியங்கா (28). இவர் அரியலூர் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று உடையார்பாளையம் தெற்கு காலனி பகுதியில் திடீரென குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து குடித்தார். பின்னர் அவரே இருசக்கர வாகனத்தில் போய் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அவரின் உறவினர்கள் அங்கிருந்து அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபற்றி உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல் நிலையத்தில் பணியில் இருந்த பிரியங்கா டிபன் சாப்பிடுவதாக கூறிச்சென்றார். பின்னர் விஷம் அருந்தியதாகவும், மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் தொடர்ந்து காவல்துறையில் தற்கொலை முயற்ச்சியில் ஈடுபடுவோர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காவலர்களுக்கு பணி சுமைய குறைக்கும் நோக்கில் பல திட்டங்களை தமிழக காவல்துறை எடுத்து வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இரண்டு பெண் காவலர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்துள்ளது. இந்த 2 பெண் காவலர்களுக்கு பணி சுமையா? அல்லது உயர் அதிகாரிகளின் தொந்தரவா? என பல்வேறு கோணங்களில் விசாரனை மேற்க்கொண்டு வருகிறார்கள்.





















