மாற்றுத்திறனாளிகளின் பசியை போக்கிய மாவட்ட ஆட்சியர் - திருவண்ணாமலையில் நெகிழ்ச்சி
மாவட்டத்தின் கடைசி எல்லையில் இருந்தும் வந்திருந்த மாற்றுத்திறனாளிகளின் பசியை போக்கும் வகையில் தனது சொந்த செலவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உணவு ஏற்பாடு செய்து அவரே அவர்களுக்கு உணவை பரிமாறினார்.
சொந்த செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கிய மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ளது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி, ஆரணி, செங்கம், போளூர், கீழ்பெத்தூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு வேண்டிய உதவிகளை பெறுவதற்காக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை புரிந்து கோரிக்கை மனுக்களை அளித்து கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் வழங்குதல், காது கேளாதவருக்கு கருவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. மாற்று திறனாளிகள் அலுவலக வாயிலில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள், அடிப்படை வசதிகள், முழுமையாக வழங்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்
மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மேலும் 08 நபர்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.652000 (ஆறு லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரம் மட்டும்) மதிப்பிலான செயற்கை கால் வழங்கப்பட்டது மூன்று சக்கரம் பொருத்தப்பட்ட சைக்கிள் ரூ 9600 (ஒன்பதாயிரத்து அறுநூறு மட்டும்) 1 மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வேண்டி 437 விண்ணப்பங்கள் பெறபட்டு 285 தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மாவட்ட ஆட்சிதலைவர் வழங்கப்பட்டது. பேருந்து பயண அட்டை 37 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இரயில் பயண சலுகை அட்டை 25 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை 06 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது. வங்கி கடன் வேண்டி விண்ணப்பித்த 42 மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 13 நபர்களும் சக்கர நாற்காலி வேண்டி 9 நபர்களும் மாதாந்திர உதவித்தொகை வேண்டி 27 நபர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறபட்டது. கால் இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய செயற்கை கால் வழங்கியும், புதியதாக செயற்கை கால் வேண்டும் என மனு அளித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அளவீடு அளக்கும் பணியையும் ஆய்வு மேற்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகளுடன் அமர்ந்து சாப்பிட மாவட்ட ஆட்சியர்
மாவட்டத்தின் கடைசி எல்லையில் இருந்தும் வந்திருந்த மாற்றுத்திறனாளிகளின் பசியை போக்கும் வகையில் தனது சொந்த செலவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உணவு ஏற்பாடு செய்து அவரே அவர்களுக்கு உணவை பரிமாறினார். இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுடன் அமர்ந்து மதிய உணவையும் அவர் உட்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேட்டியளித்தவர் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கக்கூடிய அனைத்து உபகரணங்களும், அடையாள அட்டைகளும் முறையாக வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டதாகவும், வரும் காலங்களில் வட்ட அளவிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார். திருவண்ணாமலையில் செயல்படமால் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான இறைவனின் சமையலறை தொடங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேட்டியளித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.