திருநங்கைகளின் நீண்ட நாள் கோரிக்கையான இடம் தேர்வு செய்யப்படவுள்ளதாக கலெக்டர் அதிரடி பேச்சு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் குறைதீர்வு கூட்டத்தில் அரசு சார்பில் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து கற்றுக் கொண்டு வெற்றி பெற வேண்டும் என ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை நிறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருநங்கையருக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் நலனுக்காக சிறப்பு முகாம் சமூகநலத் துறையின் சார்பில் நடைபெற்றது. அதில் திருநங்கைகள் தங்களது விவரங்களை பதிவு செய்து புதிய அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்தல், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை மற்றும் ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 160-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர்.
இந்த குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
திருநங்கைகளுக்கு முழுமையா சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தை அளித்து அவர்களையும் சமூகத்தின் ஓர்
அங்கமாக ஏற்றுக்கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் திருநங்கைகள் நல வாரியம் 2008-ல் அமைக்கப்பட்டது. திருநங்கைகள் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்வதற்காக திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இன்று நடைபெறும் முகாமில் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு, முதலமைச்சரின், மருத்துவ காப்பீடு அட்டை, ஆயுஷ்மான் மருத்துவ அட்டை பெறுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும். படித்து பட்டம் பெற்றுள்ள திருநங்கைகள் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறுவதற்கு அரசு சார்பில் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து கற்றுக் கொண்டு வெற்றி பெற வேண்டும்.
திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக இடம் தேர்வு
சுய தொழில் செய்ய விரும்பும் திருநங்கைகள் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கடனுதவி வழங்கப்படும். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு உங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். திருநங்கைகளின் நீண்ட நாள் கோரிக்கையான இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக இடம் தேர்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருநங்கைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்படும் என பேசினார். இன்று நடைபெற்ற முகாமில் திருநங்கைகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டது. அதில் ஆதார் அட்டை 19 பயனாளிகளுக்கும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை 45பயனாளிகளுக்கும், திருநங்கைகள் அடையாள அட்டை 12 பயனாளிகளுக்கு என மொத்தம் 76 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி துறை அலுவலர்கள் மற்றும் திருநங்கைகள் கலந்துகொண்டனர்.