மேலும் அறிய
நாகர்கோவிலில் சூறைக்காற்றால் அடியோடு பெயர்ந்து விழுந்த மின்மாற்றி - இருளில் மூழ்கிய ரயில் நிலையம்..!
பலத்த காற்றால் நாகர்கோவில் கோட்டார் கம்பளம் சந்திப்பில் இருந்து ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையின் ஓரமாக நிறுவப்பட்டிருந்த மின்மாற்றி மீது அப்பகுதியில் நின்றிருந்த தென்னை மரம் ஒன்று சாய்ந்தது.

சூறைக்காற்றால் சாய்ந்த மின் கம்பங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசுவதும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதேபோல நேற்று இரவு முதல் விடிய, விடிய நாகர்கோவில் பகுதியில் சூறைக்காற்று பலமாக வீசியது. இந்தநிலையில் நேற்று பலத்த காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாகர்கோவில் கோட்டார் கம்பளம் சந்திப்பில் இருந்து ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையின் ஓரமாக நிறுவப்பட்டிருந்த மின்மாற்றி மீது அப்பகுதியில் நின்றிருந்த தென்னை மரம் ஒன்று சாய்ந்தது. தென்னை மரம் விழுந்த வேகத்தில் மின்மாற்றி அடியோடு பெயர்ந்து ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. மின்மாற்றி விழுந்த வேகத்தில் அதன் அருகில் அடுத்தடுத்து நிறுவப்பட்டிருந்த 3 மின்கம்பங்களும் சாய்ந்து சேதமடைந்தன. அப்போது மின்கம்பிகள் ஒன்றோடொன்று உரசியபோது மத்தாப்பு கொளுத்தும்போது தீப்பொறி பறப்பதைப் போன்று தீப்பொறிகள் பறந்தன. மேலும் மின்மாற்றி மற்றும் மின்கம்பங்கள் வழியாகச் சென்ற மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தன.

இதனால், அப்பகுதியும், ரயில் நிலைய பகுதியும் இருளில் மூழ்கியது. இந்த சம்பவம் நிகழ்ந்த நேரம் அதிகாலை நேரமாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் யாரும் இல்லாததால் எவ்வித உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை. உடனே இதுகுறித்து ரயில்நிலைய அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின்வினியோகத்தை நிறுத்தி சீரமைப்பு பணியை மேற்கொண்டனர். மாற்று மின்பாதை வழியாக அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்வினியோகம் வழங்கப்பட்டது. ஆனால் ரயில் நிலையத்துக்கு தேவையான மின்சாரம் முழுக்க, முழுக்க கீழே விழுந்த மின்மாற்றியில் இருந்து தான் பெறப்பட்டு வந்தது என்பதால் ரயில் நிலையத்துக்கு மட்டும் மின்வினியோகம் வழங்க முடியவில்லை. இதனால் ரயில்வே நிர்வாகத்தினர் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரத்தை பெற்று மின்தேவையை பூர்த்தி செய்து கொண்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு சாலையில் கிடந்த மின் கம்பிகள் மற்றும் மின்மாற்றி மற்றும் மின்கம்பங்கள் ஆகியவற்றை மின்வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

சாலையின் ஒரு பகுதியில் பேரிகார்டுகளால் தடுப்புகள் அமைத்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டும், மற்றொரு பகுதியில் வாகன போக்குவரத்து நடைபெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனால் நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு காலை நேர ரயிலுக்காக வந்து சென்ற பயணிகள் சிரமமின்றி கடந்து சென்றனர். மேலும் மற்ற வாகனங்களும், அரசு பஸ்களும் இந்த சாலையின் ஒரு பகுதி வழியாக கடந்து சென்றதை காண முடிந்தது. பின்னர் மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் தொடர்ந்து மின்மாற்றியையும், 3 மின்கம்பங்களையும் நடும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் விழுந்த மின்மாற்றியில் சேதம் எதுவும் ஏற்படாததால் அதே மின்மாற்றியை அங்கு நிறுவினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement