நெல்லையில் மீண்டும் ஒரு மோதல்.. 9ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு..! என்று மாறும் இந்த நிலை???
மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தடுக்க இன்னும் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் உட்கோட்டம் விஜயநாராயணம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்திய கடற்படை வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி. இப்பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே வகுப்பில் சிறு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக நெல்லை மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவர், தனது சாப்பாடு பையில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை எடுத்து நாங்குநேரியை சேர்ந்த சக மாணவர் மீது சிந்தியதாக தெரிகிறது. அதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை மனதில் வைத்துக்கொண்ட நாங்குநேரியை சேர்ந்த அந்த மாணவர், இன்று காலை தனது வீட்டில் இருந்து சிறிய ரக அரிவாள் ஒன்றை எடுத்துக் கொண்டு அந்த மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தன் மீது தண்ணீரை சிந்திய சக மாணவரை தலையில் வெட்டியுள்ளார், பின்னர் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த மாணவன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாங்குநேரி ஏ எஸ் பி டாக்டர் பிரசன்ன குமார் IPS தெரிவிக்கும் ஒரு சிறு பிரச்சினைக்காக மாணவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு அரிவாள் வெட்டு வரை சென்றுள்ளதாக தெரிவித்தார். காயமடைந்த மாணவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், காயங்கள் சிறிய அளவில் ஏற்பட்டுள்ளது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் மோதலுக்கு இது தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் விஜயநாராயணம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாங்கு நேரியில் இதற்கு முன்னர் சின்னதுரை என்ற மாணவர் ஜாதிய வன்மம் காரணமாக சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் தமிழ்கம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்று கல்வியின் மூலம் அந்த தாக்குதலில் இருந்து மீண்டு வந்தார். அதனை தொடர்ந்து சில மாதங்களிலேயே நாங்குநேரி அருகே மருதகுளம் அருகே இயங்கி வரும் அரசு பள்ளியில் மாணவர்கள் இருதரப்புகளாக மோதிக் கொண்டனர். இதில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சூழலில் தற்போது மேலும் ஒரு சம்பவமாக அரிவாள் வெட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளியில் ஏற்படும் சாதாரண சிறு சிறு சம்பவங்களுக்கும் மாணவர்கள் இது இது போன்ற வன்முறையை கையாளும் நிகழ்வுகள் நெல்லை மாவட்டத்தில் தொடர் கதை ஆகி வருகிறது. பல்வேறு விழிப்புணர்வுகள், அறிவுரைகள் என வழங்கி வந்தாலும் மாணவர்கள் அதனை பின்பற்றுவதில்லை என்றும் மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தடுக்க இன்னும் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.