Thoothukudi: சாத்தான்குளம் அருகே அம்பலச்சேரியில் ஹெலிகாப்டர் இறங்கியதால் பரபரப்பு
கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நாக்பூரை தலைமையிடமாக கொண்ட விபிவிவி இந்தியா கட்டுமான நிறுவனத்தினரும் கார் உதிரிபாக தொழிற்சாலை அதிகாரிகளும் வந்து சென்றதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே அம்பலச்சேரியில் கார் உதிரிபாகம் தொழிற்சாலையில் ஹெலிகாப்டர் வந்து இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அதிக அளவில் பனை மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதில் சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலசேரி நாசரேத் சாலைக்கு நடுவே காட்டுப்பகுதியில் கடந்த 10 தினங்களாக விலை அதிகமான கார்கள் அவ்வப்போது வந்து சென்றுள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் கார்கள் வந்து சென்ற இடம் இரவோடு இரவாக தகரம் அமைத்து அடைக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியா - அமெரிக்கா நாட்டின் கொடிகள் நடப்பட்டிருந்தது. அந்த இடத்தின் அருகே வாகனம் இறங்கும் வகையில் தற்காலிக பாதையும் அமைக்கப்பட்டிருந்தது. தார்ச்சாலையும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அப்பகுதியில் ஹெலிகாப்டர் வந்து தரையிறங்கியது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் போடப்பட்டு இருந்த சாமியானா பகுதியில் இருந்து பாதுகாவலர்கள் புடைசூழ சென்ற காரில் இருந்தவர்கள் ஹெலிகாப்டரில் ஏறி சென்றனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. அதனடிப்படையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நாக்பூரை தலைமையிடமாக கொண்ட விபிவிவி இந்தியா கட்டுமான நிறுவனத்தினரும் கார் உதிரிபாக தொழிற்சாலை அதிகாரிகளும் வந்து சென்றதாக கூறப்படுகிறது.